தொலைபேசி ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பிலான குற்றச்சாட்டில் , நீதிமன்றில் முன்னிலையான மூன்று பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆறுபேரை நீதிமன்று பிணையில் செல்ல அனுமதித்தது. கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , வலி. தெற்கு பிரதேச சபை உறுப்பினர்களான வரதராசா தனகோபி , சிவரூபன் லகீந்தன் , மனோகரன் பிரதீபன் ஆகிய மூவர் உட்பட ஆறு பேர் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தல் விடுத்ததாக தெல்லிப்பழை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் பிரதேச சபை உறுப்பினர்கள் மூவர் உள்ளிட்ட ஆறு பேரையும் தெல்லிப்பழை காவல்துறையினா் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி காவல் நிலையத்திற்கு அழைத்து , தனித்தனியே வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர். அந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தினார்கள் எனும் குற்றச்சாட்டில் தெல்லிப்பழை காவல்துறையினா் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர். குறித்த வழக்கு , இன்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது , குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர். அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து , 06 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டது.