
அரச உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கையில்லா காரணத்தால் தான் பிரஜா சக்தி உருவாக்கப்பட்டது என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கருத்து தெரிவித்தமையால் பருத்தித்துறை பிரதேச சபை அமர்வில் கடும் அமளி ஏற்பட்டது.பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்றைய தினம் புதன்கிழமை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , தவிசாளரால் பிரஜாசக்திக்கு எதிராக தீர்மானம் சபையில் கொண்டு வரப்பட்டது. அதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. அதன் போது , கருத்து தெரிவித்த தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் ஒருவர் , அரசாங்க உத்தியோகஸ்தர்கள் மீது நம்பிக்கை இல்லை. அவர்கள் அரசாங்கத்திற்கு உண்மையாக இல்லை. அதனால் அவர்களை கண்காணிக்கவே பிரஜா சக்தி உருவாக்கப்பட்டு , அதனை குழுக்கள் கூடாக கண்காணிக்கின்றோம் என தெரிவித்தார். குறித்த உறுப்பினரால் சபையில் கடுமையான அமளி ஏற்பட்டு , குறித்த உறுப்பினரின் கருத்துக்கு தவிசாளர் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் தமது கண்டனங்களை சபையில் பதிவு செய்தனர். பிரஜா சக்திக்கு எதிராக தவிசாளரால் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு பருத்தித்துறை பிரதேச சபையின் 20 உறுப்பினர்களில் , தமிழரசு கட்சியின் 09 உறுப்பினர்களும் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர். தேசிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்கள் , பிரஜா சக்திக்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்த்து வாக்களித்தனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் 4 உறுப்பினர்களும் , சுயேச்சை குழுவின் ஒரு உறுப்பினரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது நடுநிலை வகித்துள்ளனர். அதேவேளை சுயேச்சை குழுவை சேர்ந்த ஒருவர் சபை அமர்வில் கலந்து கொள்ளவில்லை. அந்நிலையில் , பிரஜாசக்திக்கு எதிரான தீர்மானம் சபையில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.