அரசு கொண்டு வந்துள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (ATA), ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி மன்னார் மாவட்ட மீனவ சமூகம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. மன்னாரில் இன்று புதன்கிழமை (ஜனவரி 28, 2026) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது, மீனவ கூட்டுறவு சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் இதனைத் தொிவித்துள்ளாா். போராடும் உரிமை மற்றும் கருத்துச் சுதந்திரத்தை இந்தச் சட்டம் நேரடியாகப் பாதிக்கிறது எனவும் நீதிமன்றக் கட்டுப்பாடுகளைத் தாண்டி ஜனாதிபதி, ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்கு மட்டுமே முழுமையான அதிகாரங்களை இச்சட்டம் வழங்குகிறது எனவும் அவா் தொிவித்துள்ளாா். மேலும் பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) மாற்றாகக் கொண்டு வரப்பட்டாலும், இது அதைவிட மோசமானது என்றும் எவ்விதத் திருத்தமும் இன்றி இது முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தச் சட்டம் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் போன்ற சாதாரண உழைக்கும் வர்க்கத்திற்குப் பெரும் சுமையாகவும் அச்சுறுத்தலாகவும் அமையும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். “கதைப்பதற்கான உரிமையைக்கூடப் பறிக்கும் இந்தச் சட்டம் ஜனநாயக நாட்டிற்குத் தேவையற்றது,” என மீனவர் பிரதிநிதிகள் ஆக்ரோஷமாகத் தெரிவித்தனர்.