
திருகோணமலை கோட்டை வீதி,டச்பே கடற்கரையில் சட்டவிரோத நிர்மாணம் ஒன்றை அமைத்தமை, அதில் புத்தர் சிலை ஒன்றை வைத்தமை ஆகிய குற்றங்களை புரிந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் பௌத்த பிக்குகள் மூன்று பேர் உட்பட 10 பேரின் விளக்கமறியல் பெப்ரவரி 2 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.வழக்கு இன்று புதன்கிழமை (28) அன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது பிரதிவாதிகளான பௌத்த பிக்குகள் உட்பட்ட 10 பேர் சார்பில் முன்னாள் அமைச்சரும் சட்டத்தரணியுமான உதய கம்பன்பிலவும் மேலும் 5 சட்டத்தரணிகளும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரம் முன்வைக்கப்பட்டது.அதனை அடுத்து இருதரப்பினரது வாதங்களை செவிமடுத்த நீதிபதி வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 2 ந் திகதிக்கு தவணையிட்டுள்ளார்.பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குமாறு கோரப்பட்ட நிலையில் காவல்துறை தரப்பும்,கரையோரப் பாதுகாப்பு திணைக்களமும் ஆட்சேபித்தனர். இதனை அடுத்து மன்று பிணைக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.இதனிடையே கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக நடைபெற உள்ள போராட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.