முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பான நிதி துஷ்பிரயோக வழக்கில், முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. காரணம் ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் ஆரம்பத்தில் ‘தனிப்பட்ட பயணம்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சமன் ஏக்கநாயக்க அதனை ‘உத்தியோகப்பூர்வ பயணம்’ என மாற்றியமைத்து அரச நிதியைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்காக 16 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிணை வழங்குவதற்கான போதிய விசேட காரணங்கள் முன்வைக்கப்படாததால், அவரது பிணை மனு நிராகரிக்கப்பட்டது. “சந்தேகநபர் ஜனாதிபதி செயலாளர் என்பதை மறந்து, ஒரு சாதாரண பிரஜையாகக் கருதினால் நீதிமன்றம் எவ்வாறு செயற்படுமோ அவ்வாறே இந்த விடயத்திலும் அதிக அவதானம் செலுத்தப்படுகிறது” என நீதவான் குறிப்பிட்டார். ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்த லண்டன் பல்கலைக்கழகத்திடம் இணையவழியில் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. விளக்கமறியலில் உள்ள சமன் ஏக்கநாயக்கவிடம் நாளைய தினம் வாக்குமூலம் பெற குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலதிக செய்திகளுக்கு எமது பக்கத்தைப் பின்தொடருங்கள்!