இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் (EU) இடையே நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் (FTA) மற்றும் இடப்பெயர்வு ஒப்பந்தம் (Mobility Pact) ஜனவரி 27, 2026 அன்று டெல்லியில் நடைபெற்ற 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில் அதிகாரப்பூர்வமாக கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் முன்னிலையில் இந்த “மகா ஒப்பந்தம்” (Mother of all deals) உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைவாக, இந்திய மாணவர்கள் ஐரோப்பிய நாடுகளில் தங்கிப் படிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் விசா நடைமுறைகள் எளிதாக்கப்படும் என்பதுடன் இந்திய மாணவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் “வரம்பற்ற இடப்பெயர்வு” (Uncapped Mobility) வழங்கவும் உறுதியளித்துள்ளது. அத்துடன் பட்டப்படிப்பை முடித்த பிறகு அங்கேயே தங்கி வேலை தேடுவதற்கான வாய்ப்புகள் மற்றும் வசிப்பிட உரிமைகளில் சலுகைகள் வழங்கப்படும். இந்தியாவின் கல்வித் தகுதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கல்வித் தரங்கள் பரஸ்பரம் அங்கீகரிக்கப்படும் (Mutual Recognition of Qualifications). ஐடி (IT), பொறியியல், சுகாதாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் உள்ள இந்திய வல்லுநர்களுக்கு ஐரோப்பியச் சந்தையில் நேரடி வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். இந்தியத் திறமையாளர்களை ஐரோப்பிய நாடுகளுடன் இணைக்க டெல்லியில் ஒரு பிரத்யேக மையம் (One-stop hub) திறக்கப்பட உள்ளது. தொழில்முறை பணியாளர்கள் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குச் சென்று பணியாற்றுவதில் இருந்த சிக்கலான விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். ஐரோப்பிய கார்கள், மதுபானங்கள் மீதான இறக்குமதி வரி இந்தியாவில் குறைக்கப்படும்; பதிலுக்கு இந்தியாவின் ஜவுளி, மருந்து மற்றும் கைவினைப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்கும். பசுமை ஆற்றல் மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவுக்கு சுமார் €500 மில்லியன் நிதியுதவி வழங்க உள்ளது. இந்த ஒப்பந்தம் இந்திய இளைஞர்களின் உலகளாவிய கனவுகளுக்கு ஒரு புதிய வாசலைத் திறந்து வைத்துள்ளது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.