மன்னார் மாவட்டத்தில் வரலாற்றுப் புகழ்பெற்ற பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள மகா சிவராத்திரி பெருவிழாவிற்கான ஆரம்பகட்ட ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இன்று செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27, 2026) மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. கூட்டத்தின் முக்கிய முடிவுகளாக இலங்கை போக்குவரத்துச் சபை (CTB) மற்றும் தனியார் சங்கங்கள் இணைந்து விசேட பேருந்து சேவைகளை நடத்தவும், வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதிகளைச் சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தடையற்ற மின்சாரம், குடிநீர் விநியோகம் மற்றும் தற்காலிக கொட்டகைகள் அமைத்தல் குறித்து சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்குப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. செஞ்சிலுவைச் சங்கம், சென் ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் மற்றும் முதலுதவிப் படையினரின் சேவைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தரம் மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதி செய்யப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படவும் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் விசேட கண்காணிப்புடன், வாகனத் தரிப்பிடங்களை ஒழுங்குபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் இராமக்கிருஷ்ணன், மேலதிக அரசாங்க அதிபர்கள், அரச திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளின் பிரதிநிதிகள் இக்கலந்தாய்வில் பங்கேற்றுத் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். Tag Words: #Thiruketheeswaram #MahaShivaratri2026 #MannarNews #HinduFestival #SriLankaTemples #DevotionalPlanning #LKA #NorthernProvince #TempleFestival
திருக்கேதீஸ்வர மகா சிவராத்திரி பெருவிழா – விசேட கலந்துரையாடல். – Global Tamil News
7