யாழ்ப்பாணம், கைதடியில் ‘நேர்மையான தேசத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற விழிப்புணர்வுச் செயலமர்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் ஊழல் ஒழிப்பு குறித்துப் பல்வேறு முக்கிய கருத்துக்களைத் தெரிவித்தார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவதில் உறுதியாக உள்ளது. எந்தவித இரகசியக் கொடுக்கல் வாங்கல்களுக்கும் இடமில்லை.ஊழலில் ஈடுபடுவோருக்கு எதிராகத் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நம்பிக்கை வைக்கும் வெளிப்படையான அரச சேவையைக் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதியின் எதிர்பார்ப்பு. அரச சேவையில் வெளிப்படைத்தன்மை இருந்தால் மட்டுமே மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும். “எங்கள் கரங்கள் எப்போதும் தூய்மையானவையாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்க்காமல் எங்கள் சேவைகள் அமைய வேண்டும். நேர்மையற்ற தொழிற்பாடு சேவையாகக் கருதப்படாது.” என ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தி உள்ளார். அன்றாட மக்கள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுடன் பின்னிப்பிணைந்த உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் குறித்த தெளிவான அறிவு அவசியம். ‘அன்பளிப்பு’ என்ற பெயரில் வழங்கப்படும் பொருட்களும் இலஞ்சமாகவே கருதப்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கட்டட அனுமதி, வியாபார அனுமதி போன்ற சேவைகள் வேண்டுமென்றே தாமதப்படுத்தப்படுவது இலஞ்சம் பெறுவதற்கான நோக்கில் செய்யப்படும் இழுத்தடிப்புக்களாகவே கருதப்படும். இத்தகைய செயற்பாடுகளுக்குத் தற்போதைய நிர்வாகத்தில் இடமில்லை. கடந்த காலங்களில் அரசியல் தலைமைத்துவங்களால் பிழையானவற்றைச் செய்யத் தூண்டப்பட்டிருக்கலாம். ஆனால், தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அத்தகைய செயற்பாடுகளுக்கு இடமில்லை. உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பான, நேர்மையான சேவையை வழங்க வேண்டும். விழிப்புணர்வுச் செயற்றிட்டம்: இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேசிய விழிப்புணர்வுச் செயற்றிட்டத்தின் முதலாவது நிகழ்வு யாழ். மாநகர சபை மற்றும் யாழ். மாவட்டத்தின் 7 பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி செத்திய குணசேகர மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் ஆகியோர் ‘ஊழலற்ற உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டியெழுப்புதல்’, ‘ஊழலை எதிர்ப்பதில் உள்ளூராட்சிப் பிரதிநிதிகளின் பங்கு’ மற்றும் ‘சட்டப் பின்னணி’ ஆகிய தலைப்புகளில் விரிவுரையாற்றினர். சாவகச்சேரி நகர சபை மண்டபத்தில் – வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி நகர சபைகள் மற்றும் யாழ். மாவட்டத்தின் ஏனைய பிரதேச சபைகளுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் 4 பிரதேச சபைகளின் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு. வவுனியா மாநகர சபை மண்டபத்தில் – வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கான செயலமர்வு. #AnuraKumaraDissanayake #AntiCorruption #GoodGovernance #NorthernProvince #Governor #N_Vedanayagan #SriLanka #LocalGovernment #Transparency #Accountability #இலங்கை #ஊழல்ஒழிப்பு #நல்லாட்சி #வடக்குமாகாணம் #உள்ளூராட்சிமன்றம் #ஜனாதிபதி
🚨 ஊழலை ஒழிப்பதில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் அரசு உறுதியாக உள்ளது! – நா.வேதநாயகன். – Global Tamil News
5