🚲 ஆம்ஸ்டர்டாமில் ஃபட் பைக் (Fatbike)ற்கு தடை – Global Tamil News

by ilankai

நெதர்லாந்து தலைநகா் ஆம்ஸ்டர்டாம் நகரம் அதன் தெருக்களில் அதிகரித்து வரும் விபத்துகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புகழ்பெற்ற ‘ஃபட் பைக்’ (Fatbikes) எனப்படும் பருமனான டயர்களைக் கொண்ட மின்சார மிதிவண்டிகளுக்குத் தடை விதிக்க அல்லது கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவரத் தயாராகி வருகிறது. நெதர்லாந்து தலைநகரில் இந்த வகை மிதிவண்டிகளால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதே இதற்குக் காரணம். குறிப்பாகச் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இந்த ஃபட் பைக்கினைப் பயன்படுத்தும்போது அதிக வேகத்தில் செல்வதாலும், பாதசாரிகள் மீது மோதுவதாலும் பாரிய காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அத்துடன் பல ஃபட் பைக்கள் தொழிற்சாலையில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட (25 கி.மீ/மணி) அதிக வேகத்தில் செல்லத்தக்க வகையில் சட்டவிரோதமாக “டியூனிங்” (Tuning) செய்யப்படுகின்றன. இது மோட்டார் சைக்கிள்களுக்கு இணையான ஆபத்தை விளைவிக்கிறது. குறிப்பிட்ட வயதுக்குக் குறைந்தவர்கள் ஃபட் பைக் ஓட்டத் தடை, கட்டாய தலைக்கவசம் (Helmet) அணிதல், மிதிவண்டிகளுக்கான பாதைகளில் (Cycle lanes) இவற்றின் வேகத்தைக் குறைத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர தீா்மானிக்கப்பட்டுள்ளது. “எங்கள் தெருக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்; ஃபட் பைக்கள் தற்போது ஒரு பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறிவிட்டன,” என ஆம்ஸ்டர்டாம் நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நெதர்லாந்து போன்ற நாடுகளில் மிதிவண்டி என்பது ஒரு வாழ்வியல் கலாச்சாரம். ஃபட் பைக்கின் அதீத வேகம், பாரம்பரிய மிதிவண்டி ஓட்டுநர்கள் மற்றும் முதியவர்களுக்குப் பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தடைகள் விதிக்கப்பட்டால், மக்கள் மீண்டும் கார்களைப் பயன்படுத்தத் தொடங்கலாம் என்ற கவலையும் சூழலியலாளர்களிடையே எழுந்துள்ளது. எனவே, முழுமையான தடையை விட “முறைப்படுத்துதலே” (Regulation) சிறந்தது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஐரோப்பாவின் பிற நகரங்களான பாரிஸ் (பிரான்ஸ்) ஏற்கனவே வாடகை மின்சார ஸ்கூட்டர்களுக்கு (E-scooters) தடை விதித்துள்ளதுள்ள நிலையில் தற்போது ஃபட் பைக் மற்றும் அதிவேக மின்சார மிதிவண்டிகள் மீதான சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. பெர்லினில் (ஜெர்மனி) மணிக்கு 25 கி.மீ வேகத்திற்கு மேல் செல்லும் மின்சார மிதிவண்டிகளுக்குக் காப்பீடு மற்றும் உரிமம் (License) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கோபன்ஹேகன் (டென்மாா்க் )போன்ற நகரங்களில், மிதிவண்டி பாதைகளில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க ‘ஸ்மார்ட் டிராஃபிக் லைட்’ மற்றும் வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. Tag Words: #Amsterdam #Fatbikes #RoadSafety #EBikes #CyclingNews #Netherlands #UrbanSafety #TrafficRules #LKA #WorldNews

Related Posts