நெல்லை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு கோரிக்கை!

by ilankai

மழையில் நனைந்த நெல்லினை வீதிகளில் காயவைப்பதனை தவிர்க்குமாறு பூநகரி பிரதேசசபை கோரிக்கை விடுத்துள்ளது.ஒலி பெருக்கி பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் பூநகரி பிரதேசமெங்கும் அவசர அறிவிப்பினை பூநகரி பிரதேச சபை சுகாதாரவைத்திய அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து விடுத்துவருகின்றது.அண்மைய மழை காரணமாக அறுவடை பராயத்திலிருந்த நெற்கள் நனைந்துள்ள நிலையில் அதனை அவசர அவசரமாக வெட்டி பிரதான வீதிகளில் விவசாயிகள் காயவைத்து வருகின்றனர்.தார் வீதிகளில் பரப்பப்படும் நெற்கள் கல்லீரல் பாதிப்பு, புற்று நோய் பாதிப்பு , சிறுநீரக பாதிப்பு மற்றும் மூளை நரம்பு பாதிப்பினை ஏற்படுத்துமென எச்சரிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள்,கர்ப்பிணிப்பெண்கள் மற்றும் முதியவர்களை இத்தகைய நோய்கள் வேகமாக தாக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளதுடன் நெற்களை காய வைக்க பொருத்தமான மாற்றுவழிகளை கடைப்பிடிக்க கோரப்பட்டுள்ளது.நெற்களை பொருத்தமான மாற்று வழிகளில் காயவைக்க ஆலோசனைகளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வழங்கி வருவதுடன்  நெல்லினை சிறிய அளவில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்து வீடுகளில் காய வைக்கவும் பொதுமக்களிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.வட இலங்கையின் நெல் விளையும் பிரதான பிரதேசமாக பூநகரி உள்ளது.இம்முறை எதிர்பாராத மழைகாரணமாக நெற்பயிர்கள் நனைந்துள்ள நிலையில் விவசாயிகள் அவற்றினை அறுவடை செய்து வீதிகளில் உலர வைத்து வருகின்றனர்.இந்நிலையில் சுகாதாரத்துறையினர் தார் வீதிகளில் நெல்லினை காய வைப்பது தொடர்பில் எச்சரித்துவருகின்றவேளை பூநகரி பிரதேசசபை அவசர அறிவிப்பினை விவசாயிகளிற்கு விடுத்துள்ளது.

Related Posts