கல்விச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு நாமும் எமது ஆதரவைத் தருகின்றோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துள்ளார்.இன்று விசேட காணொளி ஊடாகக் கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,”பலவீனமான இந்த அரசின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திட்டத்தில், 6 ஆம் தர பாட அலகுச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது போடுவதற்கு அரசு முயன்ற போதிலும், அந்தச் சீர்திருத்தங்களைத் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசே இடைநிறுத்தியது.6 ஆம் தரம் முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் என இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், அரசு இதனை ஒத்திவைத்ததன் காரணமாக அவர்களின் எதிர்பார்புகள் கானல்நீராக மாறிப்போயுள்ளன.எனவே, கல்வித்துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, ஆபாச விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்தக் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.கல்வித்துறையில் முற்போக்காகச் செயற்படும் நிபுணர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்.கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இந்த அரசு முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சியும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தயார்.இந்தச் சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தர நாம் தயார் என்றார்.
0