தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு ( PTA) பதிலாக கொண்டுவரப்பட உள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்ட வரைவு (PSTA) தொடர்ந்தும் பாதுகாப்பு துறையினருக்கு அதீத அதிகாரங்களை வழங்கும் சட்ட வரைவாக காணப்படுவதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தெரிவித்தார்.வடக்கு கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் கொழும்பில் இடம்பெற்ற பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் (PSTA) தொடர்பாக சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், பாதுகாப்பு துறையினர் தாங்கள் விரும்பிய அர்த்தத்தில் வழக்குத் தாக்கல் செய்கின்ற ஒரு சட்டமாக பயங்கரவாத தடைச் சட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த சட்டம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பிரயோகிக்கப்பட்டாலும் கொழும்பில் இடம்பெற்ற அரகலய போராட்டத்தில் கடந்த அரசாங்கத்தில் பலர் குறித்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்கள். அப்போதுதான் இந்தச் சட்டத்தின் ஆபத்து தொடர்பில் தெற்கில் உள்ளவர்கள் உணரக்கூடியதாக சூழ்நிலை உருவாகியது. தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் தன்னிடம் ஆட்சி அதிகாரம் இல்லாத நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம் என்ற உத்தரவாதத்தை வழங்கி ஒரு வருடம் கடந்த நிலையிலும் நீக்கப்படவில்லை. தற்போது சில திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம் என்ற பெயருடன் ஒரு வரவை தயாரித்து முடித்திருக்கிறார்கள்.தற்போது பயன்பாட்டில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களை அடக்கும் ஒரு சட்டமாக செயற்பட்டு வந்திருக்கின்ற நிலையில் தற்போது புதிய வரைவும் அதே செயற்பாட்டை மேற்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரிக்கப்பட்டமை ஆபத்தான விடயம். தற்போதுள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தை பார்த்தால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபர்கள் அநேகமானவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் இலங்கைச் சிறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு பெறப்பட்டுள்ளன.உதாரணமாக கூறினால் 18 வருடங்கள் சிறையில் இருந்த சந்திர போஸ் என்ற நபர் தன்னை சிறையில் சித்திரவதை செய்து குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெற்றார்கள் என 2021 ஆம் ஆண்டு மேன்முறையீடு செய்த நிலையில் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார். அவரின் உடல் பகுதிகளில் அனேகமான இடங்களில் தழும்புகள் காணப்பட்டமை, சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதை காட்டுவதாக அமைந்தது. 2018 ல் கொண்டுவரப்பட்ட வரைவில் நீதித்துறையை பலவீனப்படுத்தி பொலிசாரின் அதிகாரங்களை உயர்த்துவதான சட்ட வரைப்பு தயாரிக்கப்பட்டது.இந்த புதிய சட்ட விரைவில் ஒரு மனிதனுடைய நடமாடம் சுதந்திரத்தை பொலிசார் தீர்மானிப்பது மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் செயல்பாடுகளை தடுப்பதற்கான ஒரு உத்தியாகும். அதேபோன்று பயங்கரவாதம் என்ற சொல் வரையறுக்கப்படாத நிலையில் குற்றம் ஒன்றை ஒருவர் செய்ய பார்க்கிறார் என்ற காரணத்தின் அடிப்படையில் அவரை கைது செய்யும் அதிகாரம் பாதுகாப்பு தரப்பினருக்கு வழங்கப்படுகிறது. கைது செய்யும் அதிகாரம் புதிய சட்டத்திலும் ஆயுதம் தாங்கிய படைகளிடம் காணப்படுகின்ற நிலையில் 24 மணித்தியாலங்கள் வரை அவருக்குரிய பாதுகாப்புகள் தொடர்பில் சந்தேகங்கள் எழுவதாக அமைகிறது. ஏனெனில் ஆயுதப் படைகளால் கைது செய்யப்படும் நபர் ஒருவரை 24 மணித்தியாலத்திற்கு முன்னர் பொலிஸ் நிலையம் ஒன்றில் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்படுகிறது.புதிய சட்ட வரைவில் ஏற்கனவே தடுத்து வைக்கும் அதிகாரத்தை நீதித்துறையில் இருந்து நிர்வாகத்துறை தீர்மானித்த நிலையில் சிறு திருத்தமாக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் பிணையில் விடுவிக்கலாம் என்ற ஒரு விடயத்தை சேர்த்திருக்கிறார்கள்.அதேபோன்று குற்றம் ஒப்புதல் வாக்குமூலத்தை பொலிசார் தாங்கள் நினைத்தவாறு எழுதி வாங்கும் நிலையை மாற்றி நீதிமன்றத்தின் முன் வரவேண்டும் வீடியோ பதிவு மேற்கொள்ளப்பட வேண்டுமென கூறப்படுகிறது. இது எவ்வாறாக இருந்தாலும் புதிய சட்டத்தில் நீதிமன்றம் பிணை வழங்க முடியுமே அல்லாமல் அவரை வழக்கிலிருந்து விடுவிப்பதற்கான அதிகாரம் அற்ற நீதித்துறையாகவே காணப்படுகிறது.ஆகவே பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் புதிய சட்ட வரைவும் அடிப்படை உரிமை மீறல்களை புரிவதற்கான ஒரு வரைவாகவே காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
புதிய பயங்கரவாத தடைச் சட்ட வரைபு ஆபத்தானது: பாதுகாப்புத் துறைக்கு அதீத அதிகாரம்! – அம்பிகா சுட்டிக்காட்டு!
0