சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால் கனடாவுக்கு 100% வரி விதிக்கப்படும்! ட்ரம்ப் எச்சரிக்கை

by ilankai

சீனாவுடன் கனடா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டால், கனடியப் பொருட்களுக்கு 100% இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். கனடா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தால், அமெரிக்காவிற்குள் வரும் அனைத்து கனேடியப் பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டுள்ளார். எவ்வாறாயினும் எந்த ஒப்பந்தம் என்பது குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வௌிப்படுத்தவில்லை. கடந்த வாரம், கனடா பிரதமர் கார்னி சீனாவுடன் ஒரு “மூலோபாய கூட்டாண்மையை அறிவித்ததோடு, வர்த்தக வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டார். அந்த நேரத்தில், ட்ரம்ப் இந்த நடவடிக்கையை “ஒரு நல்ல விஷயம்” என்று அழைத்தார். ஆனால், சமீப நாட்களாக அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் ஆற்றிய உரையில், அமெரிக்கா தலைமையிலான உலக ஒழுங்கு சிதைந்துவிட்டதாக பிரதமர் கார்னி கூறியதே இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது. அத்துடன் பெரிய வல்லரசுகளின்” பொருளாதாரக் கட்டுப்படுத்தலுக்கு எதிராக மற்றைய நடுத்தர நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கார்னி வலியுறுத்தினார். அவர் ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், இது அமெரிக்காவை நோக்கியே கருதப்பட்டது. இதற்கு அடுத்த நாள் தனது உரையில் பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்காவால் தான் கனடா பிழைத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும், தனது புதிய ‘அமைதி ஒப்பந்தத்தில் சேர கனடாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பையும் அமெரிக்க ஜனாதிபதி திரும்பப் பெற்றார். சீனப் பொருட்களை அமெரிக்காவிற்குள் அனுப்புவதற்கான ஒரு இறங்குத் துறையாக கனடாவை மாற்ற முடியும் என்று கார்னி நினைத்தால், அது முற்றிலும் தவறான விடயமாகும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts