ஊருக்குள் நுழையும் யானைகளால் தொடர் அச்சம் – மட்டக்களப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

by ilankai

மட்டக்களப்பு – வவுணதீவு பகுதியில் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்துவரும் யானைகளை வெளியேற்றும் நடவடிக்கைகள் நேற்று இரவு முன்னெடுக்கப்பட்டது.மட்டக்களப்பு வலையிறவு பாலத்திற்கு அருகில் உள்ள மாந்தீவுக்குள் புகுந்துள்ள யானைகள் அடிக்கடி வவுணதீவு பிரதேசத்திற்குள் நுழைந்து சேதங்களை ஏற்படுத்திவருகின்றது.வவுணதீவு பிரதேசத்தில் வயல்கள் தொடர்ச்சியாக யானைகள் சேதமாக்கிவந்துள்ளன. தற்போது அறுவடை காலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் யானைகளின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுவந்தனர்.இது தொடர்பில் அப்பகுதி மக்களின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைவாக நேற்று இரவு வனஜீவராசிகள் திணைக்களமும் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இணைந்து குறித்த யானைகளை அப்பகுதிகளிலிருந்து காடுகளுக்குள் கொண்டுசெல்லும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர்.ஒன்பதுக்கும் மேற்பட்ட யானைகள் இவ்வாறு புகுந்ததன் காரணமாக வவுணதீவு பகுதி மக்கள் இரவு வேளைகளில் அச்சத்துடனேயே கழித்துவருவதாக தெரிவிக்கின்றனர்.யானைகளை அப்பகுதியிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருவதாக வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Related Posts