அமெரிக்காவின் பல மாநிலங்களில் நிலவி வரும் கடும் பனிப்புயல் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள மின்சாரத் தடை குறித்த முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைய நிலவரப்படி, நாடு முழுவதும் சுமார் 84,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மின்சாரம் இன்றித் தவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.மாநில வாரியாக டெக்சாஸில் 43,000 நுகர்வோர்கள் மிக மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.லூசியானாவில் 6,000 குடும்பங்கள், ஆர்கன்சாஸில் 5,000 குடும்பங்கள், கலிபோர்னியாவில் 4,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.பனிப்பொழிவு மற்றும் கடும் காற்று காரணமாக, பழுதடைந்த மின் கம்பிகளைச் சீரமைப்பதில் ஊழியர்களுக்குப் பெரும் சவால்கள் நீடிக்கின்றன.பனிப்புயல் இன்னும் ஓயாததால், மின் விநியோகக் கட்டமைப்பிற்குத் தொடர்ந்து அச்சுறுத்தல் நிலவி வருகிறது. இந்த நிலையில், அவசரக்காலப் பிரிவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதேவேளை அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக நேற்று 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த் கரோலினா வரை, பனிப்புயல் வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பனிப்புயல் காரணமாக பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதால் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையிலான பகுதிகளில் வசிக்கும் சுமார் 14 கோடி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.டெக்சாஸ், ஓக்லஹோமா, கன்சாஸ் ஆகிய பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. டகோடாஸ், மின்னெசோடா ஆகிய இடங்களில் குளிர்காற்றின் வெப்பநிலை மைனஸ் 45 டிகிரி செல்சியஸ்க்கும் கீழ் சென்றதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்காளாகினர்.இதனால் பல இடங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைத் தாக்கும் கடும் பனிப்புயல்; மின்சாரமின்றித் தவிக்கும் மக்கள்! விமானங்கள் இரத்து
1