வடக்கு மாகாணத்தில் ஆயிரம் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டமொன்றை சிங்கப்பூரைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர் வழங்க முன்வந்துள்ளனர் என வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யாழ் வணிகர் கழக முன்னாள் தலைவருமான இ.ஜெயசேகரம் தெரிவித்தார்.ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களை உள்ளடக்கிய வாழ்வாதார சவால்களை எதிர்கொண்டுள்ள சுமார் 1000 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.இத்திடத்தின் முதல் கட்ட நிகழ்வு எதிர்வரும் 28ம் திகதி புதன்கிழமையன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் சு.முரளிதரனின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதில் 181 பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தக் கூடிய வகையில் அவர்களுக்கு ஏற்ற வாழ்வாதார பொறிமுறைகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளன.கடந்தகால போர்சூழ்நிலை காரணமாகவும், அண்மையில் ஏற்பட்ட புயல் அனர்த்தம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு இந்த உதவித் திட்டம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் குழந்தைகளின் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்பட உதவும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை சிங்கப்பூரைச் சேர்ந்த ரி.ரி.துரை தம்பதிகள், மற்றும் சரசீஜா ராமன் உள்ளிட்டோர் வழங்க முன்வந்துள்ளனர்.இலங்கையில் அதிக வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் கிளிநொச்சி, இரண்டாவது இடத்தில் முல்லைத்தீவு, ஐந்தாவது இடத்தில் மன்னார் மற்றும் பதினொன்றாவது இடத்தில் வவுனியா ஆகிய மாவட்டங்கள் உள்ளதாக அறிகிறோம். அந்த வகையில் உதவித் திட்டம் முதலில் கிளிநொச்சி, இரண்டாவது முல்லைத்தீவு, அதன் பின்னர் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்ற ஒழுங்கில் வழங்கப்படவுள்ளது – என்றார்.
வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்; முன்வந்துள்ள புலம்பெயர் தமிழ் குடும்பத்தினர்
4