Archive - January 25, 2026

1
கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!
2
கிவுல் ஓயா :தவறான தகவல்கள் – அமைச்சர் சந்திரசேகரன்

கிவுல் ஓயா திட்டம் வேண்டாம்!


கிவுல் ஓயா திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வவுனியா வடக்கு, நெடுங்கேணியில் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.வவுனியா வடக்கு, முல்லைத்தீவு கிழக்கில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் நோக்கில்  கிவுல்ஓயா திட்டத்தை மீண்டும் செயற்படுத்த அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தைக் கைவிடச் செய்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும், இதுதொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன.வவுனியாவில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நடந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்தியலிங்கம், ரவிகரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.இந்தக் கூட்டத்தில், கிவுல் ஓயா திட்டத்தை கைவிடுமாறு சிறிலங்கா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தமிழ் மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையிலும், வரும் 30ஆம் நாள் நெடுங்கேணியில் மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிவுல் ஓயா :தவறான தகவல்கள் – அமைச்சர் சந்திரசேகரன்


கிவுல் ஓயா அபிவிருத்தித் திட்டம்  இன அல்லது மத அடிப்படையிலான நோக்கங்களுடன் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுவது முற்றிலும் தவறானதும், அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல்கள் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.கிவுல் ஓயா திட்டம், குறிப்பிட்ட ஒரு இனத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரானதாக அல்லாது, தேசிய அபிவிருத்தி, விவசாய வளர்ச்சி மற்றும் நீர்வள முகாமைத்துவத்தை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு அரசாங்கத் திட்டம். “இந்த ஆட்சியின்கீழ் இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் எந்தவிதமான இடமும் இல்லை. அனைத்து மக்களையும் சமமாகக் கருதும் கொள்கையுடனேயே அரசாங்கம் செயல்படுகிறது”.தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளின் படி, கிவுல் ஓயா திட்டம் பாரம்பரிய தமிழ்ப் பகுதிகளில் நில அபகரிப்பையும், மக்கள் தொகை மாற்றத்தையும் நோக்கமாகக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், உள்ளூர் மக்களின் சம்மதமின்றி திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்க மதிப்பீடுகள் போதிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.தமிழ் மக்களின் நில உரிமைகளும், சமூக உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படும் என்றும், எந்த ஒரு சமூகமும் அநீதிக்குள்ளாக்கப்பட அனுமதிக்கப்படமாட்டாது. சட்டத்துக்கு முரணான நில கையகப்படுத்தல்கள் எதுவும் இடம்பெறாது என்றும், திட்டம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உரிய சட்ட நடைமுறைகளின் கீழேயே மேற்கொள்ளப்படும்.மேலும், கிவுல் ஓயா திட்டத்தின் மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாய உற்பத்தி அதிகரிக்கப்படுவதோடு, ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு நிலையான நீர்ப்பாசன வசதி கிடைக்கும். இந்த திட்டத்தை இன அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்காமல், நாட்டின் நீண்டகால அபிவிருத்தித் தேவையாகக் கருதி அணுக வேண்டும்.மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் வடக்கில் அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன.  அந்த காலகட்டங்களில் எல்லாம் அரசாங்கத்துடன் ஒட்டுனியாக இருந்த தமிழ் கட்சிகள் இன்று தமிழ் மக்களுக்கு நன்மை நடக்கும் பொழுது பொங்கி எழுகின்றன. தமது அரசியல் இருப்புக்கு இந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியால் தான் ஆபத்து என்பதால் தான் அவர்கள் மக்கள் நலன் திட்டங்களில் கூட அரசியல் சாயம் பூசி ஒரு இழிவான அரசியலை முன்னெடுத்து வருகின்றனர்.உள்ளுராட்சி சபை தேர்தலின் போது கூட அங்த காணி அளவீட்டில் அரசியல் சாயம் பூசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். தன்னுடைய அரசியல் வாக்கு வேட்டைக்காக ஒரு உரிய வகையில் இடம்பெற இருந்த காணி அளவீட்டை குழப்பினார்கள். அதில் மற்றுமொரு அங்கமாகவே இந்த திட்டத்திற்கும் போர் கொடி தொடுக்கிறார்கள்.தமக்கான அரசியல்பாதை எது என்பது தமிழ் மக்கள் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளனர். அதனால் தான் வரலாறு காணாத வகையில் வடகிழக்கில் கூட எங்களுக்கு ஆதரவு கிடைத்திருக்கின்றது.இதை குழப்பவதற்கு தான் காழ்புணர்ச்சி அரசியலாக இப்படியான விசமதனமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் மக்களுக்கு விரோதமான எந்ததிட்டங்களையும் முன்னெடுக்க மாட்டோம் என அரச அமைச்சர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Copyright © 2026. Created by Meks. Powered by WordPress.