யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய கட்டடத் தொகுதியின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்கான நேரடி கள விஜயம் ஒன்றை யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களின் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் குழு கடந்த (20) மேற்கொண்டிருந்தது. இதுவரை அமைக்கப்பட்டுள்ள கட்டுமானப் பணிகளை இக் குழுவினர் முழுமையாகப் பார்வையிட்டனர்.மேற்படி விஜயத்தின் போது முதல்வர் தலைமையில் சென்றிருந்த மாநகர குழுவிற்கு புதிய மாநகர கட்டட ஒப்பந்ததாரர் பிரதிநிதி மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் குழு இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள கட்டுமானப் பணிகள், செலவிடப்பட்டுள்ள நிதி விடயங்கள் மற்றும் இன்னும் பூர்த்தி செய்வதற்கு தேவையான நிதி மற்றும் முழுமைப்படுத்தப்படாத கட்டட தொகுதிகள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.அதிகாரிகளின் தெளிவுபடுத்தலை தொடர்ந்து முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்ததுடன், நிறைவு செய்யப்பட வேண்டிய தொகுதிகளுக்கான நிதியை கண்டறிவது தொடர்பிலும், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டன.நகர மண்டபத்தின் மீதமுள்ள கட்டுமான வேலைகள் தொடர்பிலும், தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வது தொடர்பிலும் விரைந்து மேற்கொள்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் முதல்வர் மதிவதனி அவர்கள் நகர அபிவிருத்தி அமைச்சர் உள்ளிட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் திணைகளங்களுக்கு எழுத்து மூலமான அறிக்கையை சமர்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.மேற்படி முதல்வர் தலைமையிலான விஜயத்தில் மாநகர பிரதி முதல்வர், மாநகர உறுப்பினர்கள், பிரதம பொறியியலாளர், மாநகர பதவிநிலை உத்தியோகத்தர்கள், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாநகர கட்டடத்தின் ஒப்பந்ததாரர்கள் மற்றும் துறைசார் நிபுணர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.
யாழ்.மாநகர சபையின் புதிய கட்டடத் தொகுதிக்கு முதல்வர் மதிவதனி தலைமையில் விஜயம்!
3