உலகச் சாதனை படைத்த கல்லூரி மாணவர்கள் !

by ilankai

தமிழ் இலக்கிய பாரம்பரியத்தை உலகளவில் மீண்டும் ஒலிக்கச் செய்த வகையில், கரூரில் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள், பனை ஓலைச்சுவடிகளில் திருக்குறள் எழுதியும், திருவள்ளுவர் உருவத்தை மனித வடிவில் அமைத்தும் பிரம்மாண்டமான உலகச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர். உலக எழுத்து தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த அபூர்வ முயற்சியில், 1,330 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திருவள்ளுவர் இயற்றிய 1,330 குறள்களையும் ஒவ்வொரு மாணவரும் ஒரு குறளாக பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு பொறித்தனர். பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பாரம்பரிய எழுத்து முறையை நேரடியாக அனுபவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டது.ஒவ்வொரு மாணவரும் சுமார் 20–22 நிமிடங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறளை மிகுந்த கவனத்துடன் பொறித்து முடித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து, அனைத்து மாணவர்களும் ஒருங்கிணைந்து பிரம்மாண்ட திருவள்ளுவர் உருவத்தை மனித வடிவில் அமைத்தனர். மேலிருந்து பார்க்கும் போது தெளிவாகத் தெரியும் இந்த உருவம் பார்வையாளர்களை மெய்சிலிர்க்கச் செய்தது. இந்த நிகழ்வு உலக சாதனை முயற்சியாக பதிவு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ் மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டு அடையாளத்தை உலக அளவில் எடுத்துச் சொல்லும் இந்த முயற்சி, கல்வி உலகில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.https://www.facebook.com/share/v/1C6ZCGBC2M/

Related Posts