காணாமல் போன சிறுவன் தொடர்பான பொலிஸாரின் அலட்சியத்திற்கு தமிழ் தேசிய மக்கள் இயக்கம் கடும் கண்டனம்!

by ilankai

புத்தளம் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மிகக் கவலைக்கிடமான சம்பவம் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் ஆழ்ந்த கவலையையும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செல்வநாயகம் நேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது, புத்தளத்தில் ஒரு சிறுவன் காணாமல் போன நிலையில், அந்தச் சிறுவனின் தாயார் மூலம் 2026.01.23 அன்று புத்தளம் பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பின்னர், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட தகவல்களின் மூலம் சிறுவன் பாதுகாப்பாக உள்ள இடம் கண்டறியப்பட்டு, அதனை தாயார் சார்பில் பொலிஸாருக்கு முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தத் தகவலின் அடிப்படையில், சிறுவனுக்கு தற்காலிக அடைக்கலம் வழங்கிய தரப்பினருடன் பொலிஸ் அதிகாரிகள் தொலைபேசி வழியாக உரையாடி, “நாளை சிறுவனை புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வர வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.ஆனால், மறுநாள் சிறுவனின் தாயார் மகனை காணும் நம்பிக்கையுடன் பொலிஸ் நிலையத்தில் காத்திருந்த போதும், எவரும் வருகை தராத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் காரணம் கேட்டபோது,“சிறுவன் இருக்கும் இடம் உங்களுக்கு தெரியும். அந்த பகுதி எமது நிர்வாக எல்லைக்குள் வராது.ஆகவே நீங்களே நுரைச்சோலை  பொலிஸ் நிலையத்திற்கு சென்று, சிறுவனை கொண்டு வந்து, பிறகு வாக்குமூலம் பெற்றால் விசாரணை முடிக்கலாம்” என தாயாரை பொறுப்பற்ற முறையில் துரத்தியதாக பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.இது சட்டப்படி கடுமையான குற்றமாகும். இவ்விடயம், இலங்கை சட்ட முறைமையின் கீழ் தெளிவான சட்ட மீறலாகும்.  பொலிஸ் துறை தன்னிச்சையாக விசாரணையை மேற்கொள்ளவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் முழுப்பொறுப்பு உடையது.சிறுவன் தொடர்பான எந்த அபாய நிலையும், உடனடி நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் என சட்டம் வலியுறுத்துகிறது. புகார் பதிவு செய்யப்பட்ட பின்னர், “நிர்வாக எல்லை” காரணம் காட்டி பொறுப்பை தள்ளிவிடுவது சட்டவிரோத அலட்சியமாகும். மேலும், ஒரு தாயாரை தனியாக மற்றொரு பிரதேசத்திற்கு சென்று சிறுவனை மீட்குமாறு வற்புறுத்துவது, அவரின் பாதுகாப்பையும், சிறுவனின் நலனையும் ஆபத்திற்குள்ளாக்கும் மனித உரிமை மீறல் ஆகும்.எமது வலியுறுத்தல்கள் தமிழ் தேசிய மக்கள் இயக்கம் இதன் மூலம் இந்த சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும்.பொறுப்பற்ற முறையில் நடந்த பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சிறுவன் தொடர்பான விசாரணை உடனடியாக மீண்டும் பொலிஸ் பொறுப்பில் மேற்கொள்ளப்பட வேண்டும்.எதிர்காலத்தில் இவ்வாறு சிறுவர்கள் தொடர்பான வழக்குகளில் அலட்சியம் நடைபெறாத வகையில் தெளிவான வழிகாட்டுதல் வெளியிடப்பட வேண்டும்என்று வலியுறுத்துகிறது.ஒரு தாயின் வேதனையும், ஒரு சிறுவனின் பாதுகாப்பும், நிர்வாக எல்லைகளால் அளவிடப்பட முடியாது. இது மனித உரிமை பிரச்சினை. இது சமூகத்தின் பொறுப்பு. இந்த விவகாரத்தை மறைக்காது,முழு சமூகத்தையும் விழிப்புணர்வுடன் எழச் செய்வதற்காக தமிழ் தேசிய மக்கள் இயக்கம் இதை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Related Posts