கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் (அமெரிக்காவில் ‘அசிட்டமினோஃபென்’) உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி (ADHD) அல்லது வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.‘தி லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்’ (The Lancet Obstetrics, Gynaecology & Women’s Health) என்ற மருத்துவ ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்களை உள்ளடக்கிய 43 உயர்தர ஆய்வுகளின் தரவுகளை ஆய்வு செய்துள்ளது.இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் கூறுகையில்,“வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே உள்ளது. இது குழந்தைகளுக்கு ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை” என தெரிவித்துள்ளார்.இந்த ஆய்வு, உடன் பிறந்த குழந்தைகள் அடிப்படையிலான உயர்தர தரவுகளைப் பயன்படுத்தியதால், மரபணு மற்றும் குடும்ப சூழல் போன்ற காரணிகளை நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இது மிகவும் துல்லியமான ஆய்வு எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரைகளைத் தவிர்க்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்துகள் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. இந்நிலையில், இந்த புதிய ஆய்வு முடிவுகள் கர்ப்பிணிகளுக்கு “நிம்மதியும் நம்பிக்கையும் அளிக்கும்” என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.ஆய்வில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். லண்டன் கிங்ஸ் கல்லூரி பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் கூறுகையில்,“ஒரு சாதாரண வலி நிவாரணி குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற அச்சத்தில் கர்ப்பிணிகள் மன அழுத்தம் அடைய வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வு அந்த சந்தேகங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கிறது” என்றார்.அதே நேரத்தில், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை செய்தித் தொடர்பாளர், “கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குறித்து இன்னும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்” என்று கூறினார். இருப்பினும், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் முக்கிய மருத்துவ அமைப்புகள், பாராசிட்டமால் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.கர்ப்ப காலத்தில் வலி அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையுடன் குறைந்த அளவில் பாராசிட்டமால் பயன்படுத்துவது பாதுகாப்பானது என்றும், அதனை முற்றிலும் தவிர்ப்பது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்பாடு பாதுகாப்பானதா?: ஆய்வு முடிவுகள் என்ன?
0