வவுனியாவில் போக்குவரத்து பொலிஸார்களை மோதிய லொறி சாரதி கைது.!

by ilankai

வவுனியா – களுக்குன்னமடுவ பகுதியில் இன்று (24) காலை, மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளை மோதிவிட்டு தப்பிச் சென்ற லொறி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி பொலிஸ் அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது பொலிஸ் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர்.மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸார் தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப் பற்றி ஈரட்டைபெரியகுளம் போலீசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts