அ.தி.மு.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான ஆர். வைத்திலிங்கம் அவர்கள் உத்தியோகபூர்வமாகத் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க-வில் இணையவுள்ளார். இதனையொட்டி தஞ்சாவூரில் நடைபெற்ற தனது ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மிகவும் உருக்கமாகப் உரையாற்றினார். அரசியலில் தான் பலருக்கும் உதவி செய்துள்ளதாகவும், ஆனால் கஷ்ட காலத்தில் பலர் தன்னுடன் நிற்கவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.
டெல்டா மாவட்டங்களில் அ.தி.மு.க-வின் பெரும் தூணாக விளங்கிய வைத்திலிங்கம், ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்து வந்த நிலையில், தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் இணைவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பேசிய அவர், “அ.தி.மு.க தற்போது தலைமைத்துவப் போட்டிகளால் சிதறிப்போய் உள்ளது. தொண்டர்களின் உணர்வுகளுக்கு அங்கு மதிப்பில்லை. எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான நிர்வாகம் ஒருதலைப்பட்சமாக உள்ளது. என்னால் பலனடைந்த பல நபர்கள் இன்று என்னைக் கைவிட்டுவிட்டார்கள். ஆனால் தி.மு.க தலைமை எனக்குக் கௌரவமான இடத்தையும் அங்கீகாரத்தையும் வழங்க முன்வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.
வைத்திலிங்கத்தின் இந்த மாற்றம் டெல்டா மாவட்ட அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அவருக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு தி.மு.க-விற்குப் பலம் சேர்க்கும். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக வைத்திலிங்கத்துடன் உரையாடியதாகவும், அவருக்குக் கட்சியில் தகுந்த கௌரவம் வழங்கப்படும் என உறுதியளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அ.தி.மு.க-வில் இருந்து விலகி தி.மு.க-வில் இணைவது என்பது ஒரு கடினமான முடிவு என்றாலும், தமிழகத்தின் எதிர்கால நலன் கருதி தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக வைத்திலிங்கம் தெரிவித்தார். இதற்கிடையே, வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைவதைச் சசிகலா போன்றவர்கள் விமர்சித்து வரும் நிலையில், அவரது ஆதரவாளர்கள் இதனைப் புதிய அரசியல் பயணமாகவே பார்க்கின்றனர். எதிர்வரும் சட்டசபைத் தேர்தலில் இவரின் பங்களிப்பு எவ்வாறு அமையும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.