மத்திய மலைநாட்டின் நுவரெலியா மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் தற்போது கடும் உறைபனி (Manda Pini) நிலவி வருகின்றது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் குளிருடனான வானிலை காரணமாக, அதிகாலை வேளைகளில் திறந்த வெளிகளிலும் புல்வெளிகளிலும் பனிப்படலங்கள் காணப்படுகின்றன. இன்று அதிகாலை நுவரெலியாவின் வெப்பநிலை 4 பாகை செல்சியஸிற்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது. இந்த உறைபனி நிலைமை காரணமாக நுவரெலியா மாவட்டத்தின் விவசாயப் பயிர்ச்செய்கைகள், குறிப்பாகத் தேயிலைப் பயிர்ச்செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இளம் தேயிலைத் தளிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளதால், உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும், உருளைக்கிழங்கு மற்றும் கரட் உள்ளிட்ட ஏனைய மலையக மரக்கறிப் பயிர்களும் இந்த காலநிலையால் சேதமடைந்துள்ளன. ஒருபுறம் விவசாயப் பாதிப்புகள் இருந்தாலும், மறுபுறம் இந்த அபூர்வமான வானிலையை ரசிப்பதற்காக நுவரெலியாவிற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, அதிகாலை வேளையில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி மற்றும் கிரகரி ஏரிப் பகுதிகளில் நிலவும் பனிமூட்டத்தைப் புகைப்படமெடுக்கப் பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் நுவரெலியாவின் சுற்றுலா விடுதிகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சுறுசுறுப்பான நிலை காணப்படுகிறது. எனினும், கடும் குளிரான வானிலை காரணமாகப் பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் சுவாசப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் அபாயம் உள்ளதாகச் சுகாதாரப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். இந்தப் பனி மூட்டம் இன்னும் சில நாட்களுக்குத் தொடரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வாகனச் சாரதிகள் அதிகாலை வேளைகளில் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நுவரெலியாவில் மீண்டும் கடும் உறைபனி; தேயிலைப் பயிர்ச்செய்கை பாதிப்பு – சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
2