முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று (ஜனவரி 22, 2026) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (CIABOC) இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2017-2018 காலப்பகுதியில் இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) அவசியமான மசகு எண்ணெயை நீண்டகால ஒப்பந்தங்களின்றி, அதிக விலையிலான ‘ஸ்பொட் டெண்டர்கள்’ (Spot Tenders) மூலம் கொள்வனவு செய்தமை தொடா்பிலேயே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த முறைகேடான கொள்வனவு மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபாய் (சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்) நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றில் இவர்களுக்கு எதிராக முறைப்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் சட்டத்தரணிகள் நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்தனர். முன்னதாக தம்மிக ரணதுங்க கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். அர்ஜுன ரணதுங்க வெளிநாடு சென்றிருந்ததால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையின் 1996 உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க போன்ற ஒரு முக்கிய ஆளுமைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த ஊழல் வழக்கு, நாட்டின் அரசியல் மற்றும் விளையாட்டுத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Tag Words: #ArjunaRanatunga #CorruptionCase #CPCLoss #SriLankaNews #BreakingNews2026 #Indictment #LKA #FinancialScandal #JusticeSystem
⚖️ அர்ஜுன -தம்மிகவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை – Global Tamil News
5