வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்! by admin January 22, 2026 written by admin January 22, 2026 வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறை கட்டமைப்பு மற்றும் கழிவு முகாமைத்துவச் செயற்பாடுகளை வலுப்படுத்த ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையம் (JICA) தனது மேலதிக ஒத்துழைப்புகளை வழங்க வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையிலுள்ள JICA நிறுவனத்தின் பிரதம பிரதிநிதி கென்ஜி குரோனுமா (Kenji Kuronuma) அவர்களுக்கும், ஆளுநருக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கடந்த காலங்களில் வடக்கின் பல்வேறு துறைசார் வளர்ச்சிக்கு JICA வழங்கிய பங்களிப்புக்காக ஆளுநர் தனது நன்றிகளைத் தெரிவித்தார். மாகாணத்தின் தற்போதைய பிரதான சவாலான கழிவு முகாமைத்துவத்தை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப உதவிகளின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. பொதுமக்களின் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக, இந்த ஆண்டில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தின் ஊடாக புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக JICA பிரதிநிதி தெரிவித்தார். அண்மையில் வீசிய ‘டித்வா’ புயலால் சுகாதாரத் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. வடக்கின் முதலீட்டுச் சூழலை மேம்படுத்தவும், உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்தவும் அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என கென்ஜி குரோனுமா இதன்போது உறுதி அளித்தார். இச்சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மற்றும் இணைப்புச் செயலாளர்களும் கலந்து கொண்டனர். Related News
வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடு மற்றும் கழிவு முகாமைத்துவத்திற்கு ஜப்பானின் உதவியை கோரினார் ஆளுநர் நா.வேதநாயகன்! – Global Tamil News
3