நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைப்படவுள்ள உப அலுவலகங்கள்! – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம், நல்லூர் பிரதேச சபையின் நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய மாற்றங்கள் மற்றும் உப அலுவலகங்களின் இணைப்பு குறித்த விபரங்களை தவிசாளர் ப.மயூரன் அறிவித்துள்ளார். மத்திய திறைசேரியின் வழிகாட்டலின்படி, நிர்வாகச் செலவுகளைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு விரைவான சேவையை வழங்கவும் நல்லூர் மற்றும் கொக்குவில் உப அலுவலகங்களை தலைமை அலுவலகத்துடன் இணைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நல்லூர் உப அலுவலகம் எதிர்வரும் பெப்ரவரி 09, 2026 முதல் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும் அதேவேளை கொக்குவில் உப அலுவலகம் இந்த ஆண்டு (2026) நடுப்பகுதியில் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும். இந்த இணைப்பிற்குப் பின்னா் தலைமை அலுவலகத்தில் சோலை வரி மற்றும் வருமானப் பகுதி, கட்டிட கட்டுமான அனுமதி வழங்கும் பிரிவு, பொதுமக்கள் முறைப்பாட்டுப் பகுதி சேவைகள் விஸ்தரிக்கப்படும். தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்ட பின், பழைய உப அலுவலகக் கட்டிடங்கள் வீணடிக்கப்படாமல் ஆயுள்வேத வைத்தியசாலைகளாக மாற்றம் செய்தல், சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் தொழில் பயிற்சி மையங்களாக மாற்றுதல், சபையின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் செயலமர்வு மண்டபங்களாக வாடகைக்கு விடுதல் போன்ற தேவைகளுக்காக மாற்றப்படும் என தொிவித்துள்ளாா்.

Related Posts