🏛️ நாடாளுமன்ற ஓய்வூதிய ஒழிப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் 4 மனுக்கள் – Global Tamil News

by ilankai

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் தற்போது சட்ட ரீதியான சவால்களை எதிர்கொண்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்களின் நீண்டகாலச் சலுகையான ஓய்வூதியத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ‘நாடாளுமன்றஓய்வூதியங்கள் (நீக்குதல்) சட்டமூலம்’ (Parliamentary Pensions (Repeal) Bill) தொடர்பாக சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தாா் இந்த சட்டமூலத்திற்கு எதிராக இதுவரை 4 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முன்னாள்நாடாளுமன்ற உறுப்பினா்களான எம்.எம். பிரேமசிறி, நவரத்ன பண்டா உள்ளிட்டோர் இந்த மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்தச் சட்டமூலம் தங்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும், இதனை நிறைவேற்ற வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு (2/3) பெரும்பான்மை மற்றும் சர்வசன வாக்கெடுப்பு (Referendum) அவசியம் என்றும் மனுதாரர்கள் கோரியுள்ளனர். ஜனவரி 07, 2026 நீதியமைச்சர் டாக்டர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்தச் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் நடைபெறவுள்ளது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால், தற்போது ஓய்வூதியம் பெற்று வரும் சுமார் 512 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியக் கொடுப்பனவுகள் உடனடியாக நிறுத்தப்படும். அரசியலை ஒரு லாபகரமான தொழிலாகப் பார்க்காமல், மக்கள் சேவையாக மாற்றுவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள 4 மனுக்கள் மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் மிக விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. அடுத்த வார தொடக்கத்தில் பிரதம நீதியரசர் தலைமையிலான நீதியரசர்கள் குழு இந்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளும். அரசியலமைப்பின் படி, மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு 3 வாரங்களுக்குள் உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தை (Interpretation) சபாநாயகருக்கு ரகசியமாக அனுப்பி வைக்க வேண்டும். : நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக அறிவிப்பார். அதன்பிறகே சட்டமூலம் மீதான விவாதம் நடைபெறும். இந்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு உட்பட்டதே என்பதை வாதிடுவதற்கு சட்டமா அதிபர் தலைமையிலான குழு தயாராக உள்ளது. ஒருவேளை நீதிமன்றம் சில பிரிவுகளை மாற்றச் சொன்னால், அரசாங்கம் அவசியமான திருத்தங்களை (Amendments) மேற்கொண்டு சட்டமூலத்தை நிறைவேற்ற முயற்சிக்கும். “நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரப்பிரசாதங்களைக் குறைப்போம்” என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாக நீதியமைச்சர் டாக்டர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை நிறுத்துவதன் மூலம் வருடத்திற்கு சுமார் 250 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மக்கள் பணத்தை சேமிக்க முடியும் என அரசாங்க நிதி மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. Tag Words: #SrilankaParliament #MPPension #SupremeCourt #JagathWickramaratne #AbolishPrivileges #ConstitutionalChallenge #LankaPolitics2026 #HarshanaNanayakkara

Related Posts