யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டத்திற்காக, வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான காணியைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு அந்தச் சபை கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது மண்டைதீவுப் பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை ஒட்டியுள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பை, ஆடம்பர விடுதிகள் மற்றும் இதர தேவைகளுக்காக வழங்க முடியாது என வேலணை பிரதேச சபை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மண்டைதீவு கிழக்கு பகுதியில் சுற்றுச்சூழல் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் அரச காணியை, இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை (SLC) கோரி வருகிறது. அத்துடன் இந்தக் காணியில் இனிமேல் எந்த அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலகம் ஊடாக பிரதேச சபைக்கு எழுத்து மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் “வேலணை பிரதேச சபை வருமானம் குறைந்த சபையாக உள்ளது. மைதானத்திற்கு ஏற்கனவே காணி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது ஆடம்பர விடுதிகளுக்காக மேலதிகக் காணி கோருவதை ஏற்க முடியாது,” என தவிசாளர் அசோக்குமார் தெரிவித்தார். வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கும் எமது சபை எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே பாரியளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே இந்த செயலை ஏற்க முடியாது எனவே வேலணை பிரதேச சபைக்கு உரித்தான காணி என்பதால் சபையின் எதிர்கால நலன்கருதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த காணியை நாம் வேறு ஒருவருக்கும் வழங்கும் நிலையில் இல்லை என தவிசாளர் கூறி அதை தீர்மானமாக முன்மொழிந்து சபையில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சர்வதேச மைதானம் அமையும் பட்சத்தில், அப்பகுதி ஒரு பொருளாதார மையமாக மாறும். அதனைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருமானம் ஈட்ட பிரதேச சபை திட்டமிடும் வேளையில், மத்திய அரசு அல்லது கிரிக்கெட் சபை அக்காணியைக் கோருவது அதிகார மோதலுக்கு வழிவகுத்துள்ளது. Tag Words: #JaffnaCricketStadium #Mandaitivu #Velanai #LandDispute #SriLankaCricket #LocalGovernance #LKA #BreakingNews2026 #EconomicGrowth
🏏 சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்காக வேலனை பிரதேச சபையின் காணியை சுவீகரிக்க முயற்சி – Global Tamil News
2