ரஷ்யாவின் 'நிழல் உலக' எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது பிரான்ஸ்! – Global Tamil News

by ilankai

மத்தியதரைக் கடலில் (Mediterranean Sea) சர்வதேச தடைகளை மீறிச் சென்றதாகக் கருதப்படும் ரஷ்யாவுடன் தொடர்புடைய பிரம்மாண்ட எண்ணெய் கப்பல் ஒன்றை பிரான்ஸ் கடற்படை அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளது. முன்னர் இது பல்வேறு பெயர்களில் இயங்கியதாகத் கூறப்படும் ‘Grinch’ என்ற இந்தக் கப்பலை ஸ்பெயின் மற்றும் மொராக்கோ நாடுகளுக்கு இடைப்பட்ட அல்போரன் கடல் (Alboran Sea) பகுதியில், பிரான்ஸ் கடற்படை கைப்பற்றியுள்ளது. உக்ரைன் மீதான போரின் காரணமாக ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேசப் பொருளாதாரத் தடைகளை இக்கப்பல் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், இது ‘போலி கொடி’ (False Flag) ஏந்திச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கையில் பிரித்தானியாவின் (UK) உளவுத்துறை மற்றும் பிற நட்பு நாடுகளும் பிரான்ஸிற்குத் தேவையான தகவல்களை வழங்கி உதவியுள்ளன. ரஷ்யா தன் மீதான பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதற்காக, முறையான காப்பீடு மற்றும் ஆவணங்கள் இல்லாத பழைய கப்பல்களைப் பயன்படுத்தி கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. இதுவே ‘Shadow Fleet’ என அழைக்கப்படுகிறது. “சர்வதேச சட்டங்களை மீறுவதை தாங்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள போவதில்லை எனவும் உக்ரைன் மீதான போருக்கு நிதியளிக்கும் ரஷ்யாவின் இத்தகைய மறைமுகச் செயல்கள் தடுக்கப்படும்.” எனவும் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட கப்பல் தற்போது பிரான்ஸின் மார்சைய் (Marseille) துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, சட்ட ரீதியான விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளன. ________________________________________

Related Posts