இலங்கை அரசியலில் ஒரு முக்கிய புள்ளி மறையும் போதெல்லாம், அந்த மரணத்தைச் சுற்றியுள்ள மர்மங்களும் சந்தேகங்களும் விவாதிக்கப்படுவது ஒரு தொடர்கதையாகவே இருந்து வருகிறது. அண்மையில் காலமான நந்தன குணத்திலகவின் மரணமும் இப்போது அத்தகையதொரு பேசுபொருளாக மாறியுள்ளது. கே. சஞ்சீவ (කේ සංජීව) என்பவர் தனது முகநூலில் பதிவுசெய்த சிங்க மொழிமூலமான கருத்துக்களின் தமிழாக்கமும், சில மேலதிக தகவல்களும் இங்கே இணைக்கப்பட்டுள்ளன. வரலாறு சொல்லும் மர்ம மரணங்கள்: • காமினி அதுக்கோரல: ஐக்கிய தேசியக் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவராக உருவெடுத்த காமினி அதுக்கோரல 2002 இல் காலமானபோது, அது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சதி என்று பேசப்பட்டது. தேனில் விஷம் கலக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், அவர் நீண்டகாலமாக சர்க்கரை மற்றும் கொழுப்பு நோய்க்கு மருந்து எடுத்து வந்தவர் என்று அவரது தரப்பு கூறியது. ஆனாலும் அந்தச் சந்தேகம் இன்றும் தீரவில்லை. • எம்.எச்.எம். அஷ்ரப்: முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஷ்ரப்பின் ஹெலிகாப்டர் விபத்து இன்றும் ஒரு மர்மமே. இந்தக் குற்றச்சாட்டு அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை நோக்கியே திரும்பியது. • உபாலி விஜேவர்தன: தொழிலதிபர் உபாலி விஜேவர்தன சென்ற விமானம் காணாமல் போனது குறித்த குற்றச்சாட்டுகள் முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாச மீது சுமத்தப்பட்டன. • ஸ்ரீபதி சூரியாராச்சி: ஒரு கார் விபத்தில் இவர் உயிரிழந்தபோது, அது திட்டமிட்ட கொலை என மஹிந்த ராஜபக்ஷ மீது விரல் நீட்டப்பட்டது. நந்தன குணத்திலகவின் மரணம் – ஏன் சந்தேகம் எழுகிறது? தற்போது நந்தன குணத்திலகவின் மரணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல கதைகள் பரவி வருகின்றன. இதற்கான முக்கிய காரணங்களாகப் பல முக்கிய விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. தான் விஷம் மூலமாகவோ அல்லது விபத்து மூலமாகவோ கொல்லப்படலாம் என நந்தன குணத்திலக உயிரோடு இருந்தபோது பலமுறை அச்சம் வெளியிட்டிருந்தார். குறிப்பாக ஜே.வி.பி (JVP) மீது அவர் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டிருந்தது, அதனால் “விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம்” என்ற சந்தேகத்திற்கு வலுசேர்க்கும் வகையில் சிலரால் பேசப்படுகிறது. லால் காந்தா போன்றவர்களின் அண்மைக்கால உரையாடல்களும், நந்தன குணத்திலகவின் கடந்தகால அரசியல் நிலைப்பாடுகளுமே இந்தச் சந்தேகங்களுக்கு “சிறகுகள்” முளைக்கக் காரணமாகியுள்ளதாக 4றப்படுகிறது. இப்படியான குற்றச்சாட்டுகள் பரவுவது சமூகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. இது மக்களிடையே அரசாங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் மீது ஒருவித வெறுப்புணர்வையும், தேவையற்ற பயத்தையும் உருவாக்கும். குறிப்பாக இடதுசாரி அரசாங்கங்கள் உலகளவில் ஸ்டாலின் போன்ற ஆட்சியாளர்களின் காலத்திலிருந்தே இத்தகைய “அரசியல் கொலை” குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றன. தற்போதைய அரசாங்கம் இத்தகைய குற்றச்சாட்டுகள் பரவுவதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையைப் பேணவும் முக்கயத்துவம் கொடுக்க வேண்டும். நந்தன குணத்திலகவின் உறவினர்களுக்கு அவரது மரணத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ஒரு முறையான விசாரணை நடத்தப்பட்டு அந்தச் சந்தேகம் களையப்பட வேண்டும். நந்தனாவை ஒரு “துரோகி” என்ற பிம்பத்திற்குள் அடக்க முனைவதை விடுத்து, உண்மையை வெளிக்கொண்டு வருவதே ஜனநாயகத்திற்கு அழகாகும். தொகுப்பு: கே. சஞ்சீவ (කே සංජීව) ________________________________________
நந்தன குணத்திலகவின் மரணமும் இலங்கையின் அரசியல் பிரமுகர்களின் மரணங்களில் தொடரும் சந்தேகங்களும்! – Global Tamil News
1