மன்னார் நகர சபையின் தவிசாளர் டானியல் வசந்தன் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்ற அமர்வில், தவிசாளருக்கும் முன்னாள் தவிசாளர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனுக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் மற்றும் ஒருவரையொருவர் தனிப்பட்ட ரீதியில் சாடிக்கொண்ட சம்பவங்களால் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேவியர் ஜோன் பொலின்டன் மன்னார் நகர சபை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவிப்பு கிடைத்துள்ளதாக தவிசாளர் அறிவித்தார். ‘சைனா பஜார்’ கடைகளை குத்தகைக்கு விட்டதில் நகர சபைக்கு 4 கோடியே 50 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இதற்கு முந்தைய நிர்வாகமே காரணம் எனவும் தவிசாளர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன், தற்போதைய தவிசாளர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகவும், பல உயிரிழப்புகளுக்குக் காரணமானவர் என்றும் பகிரங்கமாகச் சாடினார். இதேவேளை சபையிலுள்ள பெண் உறுப்பினர்கள் தங்களுக்கு எதிராகவும், தமது குடும்பங்களுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் (Facebook) மேற்கொள்ளப்படும் போலிப் பிரச்சாரங்கள் குறித்துக் கவலை வெளியிட்டனர். பெண் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு ஊடகங்கள் மதிப்பளிக்க வேண்டும் எனவும், இழிவுபடுத்துபவர்கள் தங்கள் வீடுகளிலும் பெண்கள் இருப்பதை உணர வேண்டும் எனவும் அவர்கள் உருக்கமாகத் தெரிவித்தனர். சபையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் சில முக்கிய தீர்மானங்கள் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. மூர்வீதி பள்ளிவாசல் வளாக இறைச்சிக்கடை ஒப்பந்தம் தொடர்பான சிக்கல்கள் குறித்து தவிசாளர் விளக்கமளித்தார். உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டன. அத்துடன் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து தரம் உயர்த்த வேண்டும் என்ற உப தவிசாளரின் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை வைத்தியசாலை தொடர்பான தீர்மானத்திற்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். “நகர சபையின் தீர்மானத்தினால் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது” என உறுப்பினர் மைக்கல் கொலின் காரசாரமாகத் தெரிவித்ததுடன், இந்தத் தீர்மானத்தின் போது தவிசாளர் நடுநிலை வகித்தார். சபை அமர்வுகள் நிறைவடைவதற்கு முன்னதாகவே முன்னாள் தவிசாளர் அன்ரனி டேவிட்சன் மற்றும் அவரது ஆதரவு உறுப்பினர் ஒருவர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். Tag Words: #MannarUrbanCouncil #PoliticalClash #LKA #LocalGovernance #CorruptionCharges #MannarHospital #WomenInPolitics #SajithPremadasa #BreakingNews2026
🏛️ மன்னார் நகர சபையில் அமளிதுமளி – இன்னாள் – முன்னாள் தவிசாளர்கள் மோதல் : – Global Tamil News
5