அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலகின் மிகப்பெரிய தீவான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைக்கும் தனது திட்டத்தில் மீண்டும் தீவிரமாக இறங்கியுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) பேசிய டிரம்ப், “கிரீன்லாந்து எங்களது பகுதி, அதை அமெரிக்கா முழுமையாகச் சொந்தமாக்க விரும்புகிறது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இராணுவ பலத்தைப் பயன்படுத்தப் போவதாக எச்சரித்த டிரம்ப், தற்போது “நாங்கள் பலத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண விரும்புகிறோம்” என ஒரு படி இறங்கி வந்துள்ளார். டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஐரோப்பிய நாடுகளின் மீது 10% முதல் 25% வரை இறக்குமதி வரி (Tariffs) விதிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியுள்ளார். நேட்டோ (NATO) பொதுச்செயலாளருடன் நடத்திய சந்திப்பிற்குப் பிறகு, கிரீன்லாந்து விவகாரத்தில் ஒரு “புரிந்துணர்வு ஒப்பந்தம்” (Framework Deal) எட்டப்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், டென்மார்க் தரப்பு இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. டிரம்ப் ஏன் கிரீன்லாந்தை வாங்க விரும்புகிறார்? ஆர்க்டிக் பகுதியில் ரஷ்யா மற்றும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுக்க கிரீன்லாந்து ஒரு கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். பனிப்பாறைகளுக்கு அடியில் புதைந்துள்ள அரிய வகை கனிமங்கள் (Rare Earth Minerals) மற்றும் எரிசக்தி வளங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும். அமெரிக்காவை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து காக்க, கிரீன்லாந்தில் ஒரு வலுவான பாதுகாப்பு வளையத்தை (Missile Defense Shield) உருவாக்க டிரம்ப் திட்டமிடுகிறார். எனினும் “கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல” என்பதில் டென்மார்க் அரசு உறுதியாக உள்ளது. “இது ஒரு தனிநபரின் விருப்பத்திற்காக மாற்றப்பட வேண்டிய சொத்து அல்ல, இது மக்களின் நிலம்” என்று கிரீன்லாந்து தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ________________________________________
கிரீன்லாந்தை வளைக்கத் துடிக்கும் டிரம்ப்: உலக அரசியலில் புதிய பரபரப்பு! – Global Tamil News
5