பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளை மேற்கொள்வார்கள் என நம்புவதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் யாழ். மாவட்ட செயலாளரிடம் தெரிவித்துள்ளார். பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆன்ட்ரூ பற்றிக் (Andrew Patrick) அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் புதன்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று (புதன்கிழமை, ஜனவரி 21, 2026) நடைபெற்ற இந்தச் சந்திப்பு, ‘வடக்கு முதலீட்டு உச்சிமாநாடு – 2026’ நடைபெறும் அதே தினத்தில் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இச் சந்திப்பில் உயர்ஸ்தானிகர் டித்வா புயல் தாக்கத்தின் பாதிப்புக்கள் தொடர்பாக வினாவிய போது, டித்வா புயல் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் 20023 குடும்பங்கள் பாதிக்கப்பட்டதாகவும், வீடுகளை சுத்தம் செய்வதற்காக 13168 குடும்பங்களுக்கு 25000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதாகவும், பாதிக்கப்பட்ட 15260 பாடசாலை மாணவர்களுக்கு 15000 ரூபா வீதம் பாடசாலை உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கி தொடர்ச்சியான கல்விக்கு உறுதுணையாகவிருந்ததாகவும், மேலும், சேதமடைந்த வீதிகள் உள்ளிட்டவற்றை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் மாவட்ட செயலர் தெரிவித்தார். இதனையடுத்து டித்வா புயல் பாதிப்புகளுக்காக பிரித்தானியா வழங்கிய நிதியுதவிகள் செஞ்சிலுவைச் சங்கம் ஊடாக முறையாகச் சென்றடைவதை உயர்ஸ்தானிகர் உறுதிப்படுத்தியதுடன், அரசாங்கத்தின் துரித மீட்புப் பணிகளைப் பாராட்டினார். மேலும் யாழ். இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் உற்பத்தித் துறையில் மிகுந்த திறமை கொண்டுள்ளனர். அவர்களுக்கான பொருத்தமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முடியும் என விவாதிக்கப்பட்டது. பிரித்தானியாவில் வாழும் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் முதலீடுகளைச் செய்ய முன்வருவார்கள் எனத் தான் நம்புவதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார். சந்திப்பின் போது காங்கேசன்துறை (KKS) முதலீட்டு வலயம், அதன் தற்போதைய நிலை மற்றும் விரிவாக்க வாய்ப்புகள், போருக்குப் பிந்தைய மற்றும் புயலுக்குப் பிந்தைய மாவட்டத்தின் எழுச்சி குறித்து உயர்ஸ்தானிகர் விபரமாகக் கேட்டறிந்து கொண்டார்: Tag Words: #UKinSriLanka #AndrewPatrick #JaffnaDistrictSecretariat #TamilDiaspora #InvestmentInJaffna #CycloneDitwah #KKSInvestmentZone #NorthernSriLanka2026 #EconomicGrowth
🇬🇧 புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நம்பிக்கை! – Global Tamil News
7