ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயை சுட்டுக்கொன்ற டேட்சுயா யாமாகாமிக்கு (Tetsuya Yamagami) ஜப்பானிய நீதிமன்றம் இன்று ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஜூலை 2022-ல் நாரா (Nara) நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஷின்சோ அபேயை, யாமாகாமி தான் கைப்பட தயாரித்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட யாமாகாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தனது தாயார் ‘யூனிஃபிகேஷன் சர்ச்’ (Unification Church) அமைப்புக்கு அதிக பணம் வழங்கி குடும்பத்தை சீரழித்ததாகவும், அந்த அமைப்புடன் அபே நெருக்கமாக இருந்ததே கொலைக்குக் காரணம் என்றும் தெரிவித்தார். கடந்த ஆண்டு விசாரணை தொடங்கியபோது, யாமாகாமி கொலைக் குற்றச்சாட்டை வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஜப்பானிய சட்டப்படி குற்றத்தை ஒப்புக்கொண்டாலும், முழுமையான விசாரணைக்குப் பிறகே தண்டனை அறிவிக்கப்படும். இந்தநிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்த ஆயுள் தண்டனையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், ஒரு நாட்டின் தலைவரைக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றம் எனக் கூறி இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. இந்தச் சம்பவம் ஜப்பானிய அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியது. குறிப்பாக, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கும் மத அமைப்புகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்தன. Tag Words: #ShinzoAbe #TetsuyaYamagami #JapanNews #Justice #LifeImprisonment #NaraCourt #GlobalNews2026 #PoliticalAssassination #LegalVerdict
⚖️ ஜப்பான் பிரதமா் கொலை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை! – Global Tamil News
7