பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிய அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் மைக் ஜான்சன் (Mike Johnson) அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கிரீன்லாந்து (Greenland) விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு விடுத்த சுங்கவரி அச்சுறுத்தல்களால் நிலவும் பதற்றத்தைத் தணிக்கவே தாம் லண்டன் வந்துள்ளதாக குறிப்பிட்டார் அமெரிக்க சுதந்திரத்தின் 250-வது ஆண்டைக் கொண்டாடும் வகையில், லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கில் உரையாற்றிய முதல் அமெரிக்க சபாநாயகர் என்ற பெருமையை மைக் ஜான்சன் (ஜனவரி 20, 2026) பெற்றுள்ளார். “சூழலை அமைதிப்படுத்தவே (Calm the waters) நான் இங்கு வந்துள்ளேன்,” என அவர் தெரிவித்த அவா் மேற்கத்திய நாடுகள் தற்போது “தன்னம்பிக்கை நெருக்கடியால்” (Crisis of self-doubt) பாதிக்கப்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளார். மேலும் எமது வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த அவநம்பிக்கை நமது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என குறிப்பிட்ட அவர் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற நாடுகளின் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை எதிர்கொள்ள, அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். ட்ரம்ப்பின் “அமெரிக்கா ஃபர்ஸ்ட்” (America First) கொள்கை என்பது “அமெரிக்கா அலோன்” (America Alone) என்பதாகாது, நேச நாடுகளுடன் இணைந்தே அமெரிக்கா பயணிக்கும் என அவர் உறுதியளித்தார். மேலும் நேட்டோ கூட்டணி வலுவாக இருப்பதாகவும், அதற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்றும் மைக் ஜான்சன் கூறினார். நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கடல்சார் பாதுகாப்பில் AUKUS கூட்டணி மிகச் சிறப்பாகச் செயல்படுவதைப அவா் பாராட்டினார். இதேவேளை மைக் ஜான்சன் மற்றும் பிரித்தானியப் பிரதமர் கியர் ஸ்டார்மர் இடையிலான சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் பேசப்பட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற இந்தச் சந்திப்பு, அமெரிக்காவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையிலான உறவில் ஏற்பட்டிருந்த சில கசப்புகளைத் தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. மொரிஷியஸிடம் சாகோஸ் தீவுகளை ஒப்படைக்கும் பிரித்தானியாவின் முடிவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்த நிலையில் சாகோஸ் தீவுகளில் உள்ள டியாகோ கார்சியா (Diego Garcia) ராணுவத் தளத்தின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலம் குறித்து மைக் ஜான்சன் கவலை வெளியிட்டுள்ளார். எனினும், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் இதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என அவர் நம்பிக்கையளித்தார். மேலும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளும் இணைந்து செயல்படப் புதிய ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதுடன் தொழில்நுட்ப ரீதியாகச் சீனாவிடமிருந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளும் தரவுகளைப் பகிர்ந்துகொள்ள (Data Sharing) இணக்கம் காணப்பட்டது. அத்துடன் உக்ரைனுக்கான அமெரிக்காவின் ஆதரவுத் தொடரும் என்று ஜான்சன் உறுதியளித்தார். ட்ரம்ப் நிர்வாகம் வந்தாலும் உக்ரைன் விவகாரத்தில் ஒரு நியாயமான தீர்வை எட்டவே அமெரிக்கா முயற்சிக்கும் என அவர் ஸ்டார்மரிடம் தெரிவித்தார். Tag Words: #MikeJohnson #UKParliament #USUKSpecialRelationship #GreenlandTensions #America250 #Diplomacy2026 #WestminsterAddress #TrumpTariffs #GlobalSecurity
📝 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாற்றிய அமெரிக்க சபாநாயகர் – Global Tamil News
6