தைப்பொங்கலையொட்டி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க பங்கேற்ற நிகழ்வுகளில், தமிழ்க் கட்சிகள் குறிப்பாக இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஓரங்கட்டப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் வடமாகாண அவைத்தலைவருமான சி.வி.கே. சிவஞானம் இக்கருத்தை முன்வைத்தார். வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளூராட்சி சபைகளையும் கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சியோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளோ ஜனாதிபதி நிகழ்வுகளில் மேடைகளில் காணப்படவில்லை. அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டனர். “எங்களை ஓரங்கட்டி ஒதுக்கிவிட்டு நிகழ்வுகளை நடத்தும் பொழுது, அந்த நிகழ்வுகள் JVP மற்றும் NPP யின் நிகழ்வாகவே காட்டப்படுகிறது. அதை அரசாங்க நிகழ்வாகப் பார்க்க முடியாது,” என சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். தன்னை ஒரு மாகாண சபை அவைத்தலைவராக அழைப்பதுமில்லை, அறிவிப்பதுமில்லை எனவும், மக்கள் வாக்குப் பெற்று வந்த பிரதிநிதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்திற்கு நல்லெண்ண சமிக்கைகளை வழங்கிய போதிலும், வடக்கில் ஒருமித்த பயணம் சாத்தியமில்லை எனவும் சிவஞானம் சுட்டிக்காட்டினார். மேலும் “வடக்கு கிழக்கில் எமது பிரதிநிதிகளை ஓரம்கட்டி ஜனநாயக விரோத செயலை செய்வது ஆரோக்கியம் அல்ல. ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களை உரிய முறையில் ஏற்று செயற்படுங்கள்,” என ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்தார். தமது பிரச்சினைகள் தொடர்ந்தால் நாடாளுமன்றத்திலும், சர்வதேச ரீதியாகவும், ஊடகங்களுக்கும் செல்வோம் எனவும் அவா் எச்சரித்தார். Tag Words: #CVKSivagnanam #TamilPolitics #JaffnaNews #SLACTNA #JVP #NPP #AnuraKumaraDissanayake #PoliticalExclusion #NorthEast #SriLankaPolitics2026
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே – Global Tamil News
8