தைப்பொங்கலும் காணி விடுவிப்பின் எதிர்பார்ப்பும் – யாழில் ஜனாதிபதி அறிவிப்பாரா? – Global Tamil News

by ilankai

தைப்பொங்கல் தினமான நாளைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்டுள்ள தனியார் காணிகள் தொடர்பில் சாதகமான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்ற எதிர்பார்ப்புடன், வடக்கு மாகாணம் முழுவதும் காணி உரிமையாளர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். “மக்களின் காணிகள் மக்களுக்கே” என ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வரும் நிலையில், அந்த வார்த்தைகள் நடைமுறையில் எப்போது பிரதிபலிக்கும் என்ற கேள்வியே இன்றைய யாழின் மையப் பிரச்சினையாகியுள்ளது. வலி. வடக்கு பிரதேசத்தில் மாத்திரம் சுமார் 2,500 ஏக்கர் தனியார் காணிகள் இன்னமும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, மயிலிட்டி துறை தெற்கு போன்ற கிராம சேவையாளர் பிரிவுகள் முழுமையாகவே இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் காணப்படுகின்றன. இக்காணிகளில் பெரும்பாலானவை பாதுகாப்புத் தேவைகளுக்குப் பயன்படுத்தப்படாமல், பற்றைக்காடுகளாகவே காட்சியளிக்கின்றன. பயன்பாடற்ற இக்காணிகளை விடுவிப்பதில் பாதுகாப்புத் தரப்பினருக்கு தடைகள் இல்லை எனத் தெரிந்தும், அவை தொடர்ச்சியாக கையகப்படுத்தி வைக்கப்படுவது காணி உரிமையாளர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கிறது. பலாலி கிழக்குப் பகுதியில் உள்ள சுமார் 600 ஏக்கர் காணியும் இதேபோன்று எந்தவிதமான பயன்பாடும் இன்றி பாதுகாப்பு வலயத்துக்குள் முடக்கப்பட்டு உள்ளது. அதேவேளை, வசாவிளான் சந்திக்கு அருகிலுள்ள மானம்பிராய் ஆலயம் உள்ளிட்ட மூன்று ஆலயங்களை விடுவிக்க ஏற்கனவே இணக்கம் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவை இன்னமும் உரிமையாளர்களுக்கும் பக்தர்களுக்கும் கையளிக்கப்படவில்லை என்பது அரசின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்குகிறது. குரும்பசிட்டி, கட்டுவான் போன்ற பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து தனியார் காணிகள் கைப்பற்றப்பட்டு, அவற்றில் இராணுவ விவசாய பண்ணைகள் நடாத்தப்படுவது, “பாதுகாப்பு” என்ற சொல்லின் உண்மையான பொருளை மக்கள் மத்தியில் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இதேபோன்று தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக 16 பேரின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை விடுவிப்பது தொடர்பில் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதாக ஒன்றரை வருடங்களாக அரசாங்கம் கூறிவந்த போதிலும், நடைமுறை ரீதியான எந்த மாற்றமும் இதுவரை நிகழவில்லை. அண்மையில் தையிட்டி காணி பிரச்சினை தொடர்பில் கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், விகாராதிபதி உள்ளிட்ட தரப்பினரை அழைத்த அதிகாரிகள், காணி உரிமையாளர்களை அழைக்காதமை, ஒரு தலைப்பட்டசமான தீர்மானங்களை நோக்கிய அரசின் அணுகுமுறையையே வெளிப்படுத்துகிறது. விகாரைக்காக கைப்பற்றப்பட்ட காணியில் முதல் கட்டமாக இரண்டு ஏக்கரை விடுவிக்க இணக்கம் எட்டப்பட்டதாக முன்னர் வெளியான செய்திகளும் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இவ்வாறான நிலைமைகளுக்கிடையில், பலாலி வீதி காலை முதல் மாலை வரை கடுமையான கட்டுப்பாடுகளுடன் மட்டுமே திறந்து விடப்பட்டிருப்பதும், வல்லை–அராலி வீதி இன்னமும் மூடப்பட்டிருப்பதும், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையையும், குறிப்பாக வடமராட்சி மக்களின் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலைக்கான அணுகலையும் கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வீதிகள் முழுமையாகவும், 24 மணி நேரமும் கட்டுப்பாடுகள் இன்றி திறந்து விடப்பட வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். கடந்த காலங்களில் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் காணி விடுவிப்பு தொடர்பான சாதகமான அறிவிப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தாலும், எந்தவிதமான அறிவிப்புகளும் இன்றி அவர் திரும்பிச் செல்வதே வழமையாகியுள்ளது. இந்நிலையில், இம்முறை தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி, வடக்கு மக்களின் நீண்டநாள் வேதனைக்கு தீர்வு காணும் வகையில் உறுதியான அறிவிப்புகளை வெளியிடுவாரா என்பதே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ளது. இத்தகைய எதிர்பார்ப்புகளுக்கிடையே, எழுவை தீவில் கடற்படையினருக்கு நிரந்தரமாக காணிகளை சுவீகரிக்க, எதிர்வரும் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காணி அளவீட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை, காணி விடுவிப்புக்கான நம்பிக்கைகளுக்கு எதிர்மறையான செய்தியாகவே பார்க்கப்படுகிறது. தைப்பொங்கல் நாளில் ஜனாதிபதி வெளியிடவுள்ள அறிவிப்புகளே, “மக்களின் காணிகள் மக்களுக்கே” என்ற வாக்கியம் உண்மையா, அல்லது வெறும் அரசியல் முழக்கமா என்பதை தீர்மானிக்கும் தருணமாக அமையவுள்ளது.

Related Posts