மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விடுவிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விற்கு இன்று செவ்வாய்க்கிழமை (13) அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, மன்னார் தீவு பகுதிக்குள் காற்றாலை, கனிம மண் அகழ்வு திட்டங்கள் வேண்டாம் எனும் மன்னார் மக்களின் கூட்டு கோரிக்கையை அடியோடு நிராகரித்து ஆட்சியாளர்கள் தமது நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பது கடும் விசனத்துடன் ஆழ்ந்த கவலை அடைகின்றோம். ‘ஜனநாயகம் என்பது வலிமை அற்றவர்கள் கடலுக்குள் உப்பை கரைப்பதற்கு ஒப்பானது’. சமத்துவம் என்பது உதட்டளவில் அல்ல அது சமூக சமநீதியாக செயல் வடிவம் பெற வேண்டும். இனத்துவ மொழித்துவ பிரதேசத்துவ வேறுபாடுகள் அடிப்படையில் பௌத்த தேசியவாத இனவாத அடக்குமுறை கோட்பாட்டை பஞ்சசீல சித்தாந்தம் இன்றி அடிப்படை வாதமாகவே மேலெழுந்தது அதனால் தான் இந்த நாட்டில் 70 ஆண்டுகளுக்கு மேலாக மேட்டிமை வாத அடக்குமுறையை அணைய விடாமல் பிரகாசித்து பாதுகாத்து ஆட்சி மாறினாலும் கட்சி மாறினாலும் வழி வரைபடம் மாறுவதில்லை. என்பதே கசப்பான உண்மை. பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் நீதி ‘நிர்விகல்ப சமாதியாகவே’ நீளுறக்கம் கொள்கிறது சபிக்கப்பட்ட இனமாகவே தமிழ் மக்கள் வாழ்வியல் தொடர்கிறது 13.08.2025 அன்று தங்களை சந்தித்தபோது மன்னார் மக்களின் விருப்புக்கு மாறாக செயல்பட போவதில்லை என உறுதி கூறினீர்கள். மன்னார் மாவட்டம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும் அதன் இயல்பை கெடுக்காமல் பாதுகாப்பதே அவசியமாகும். எமது மக்களின் கூட்டு கோரிக்கையை குழி தோண்டி புதைத்து விட்டு திட்டமிட்டபடி 14 காற்றாலை பணிகளும் நடைபெறுகின்றன. கனிம மணல் அகழ்வு முற்றாக நிறுத்தப்படும் என எமக்கு கூறினீர்கள். ஆனால் கனிம மண் அகழ்வு க்குரிய இரண்டு நிறுவனங்களும் தமது செயற்பாட்டை தொடர்ந்த வண்ணமே உள்ளனர். அதானிக்கு வழங்க இருந்த 52 காற்றாலை க்குரிய இடங்களும் வேலை நிறுத்தப்படவில்லை. அதானியின் கம்பெனி தான் வெளியேறியதே தவிர திட்டம் முழுமையாக கைவிடப்படவில்லை. காணி சுவீகரிப்பும் நிறுத்தப்படவில்லை. இரண்டு லட்சத்து இருபத்தி ஓராயிரத்து இரு நூற்றி இருபது ஹெக்டேர் (221,220) நிலம் மன்னார் மாவட்டத்தில் வன திணைக்களம், வன விலங்குகள் திணைக்களத்தினாலும் வர்த்தமானிக்கு உட்படுத்தப்பட்டுள்ளது . இதில் 35,750 ஏக்கர் நிலம் வளம் மிக்க பயிர்ச்செய்கை க்குரிய இடமாகும் .அதில் 108 குளங்களும் உள்ளடங்குகின்றன. இதனை விடுவிக்குமாறு தங்களிடம் என்னால் கோரிய போது ஆறு மாதத்துக்குள் விடுவிப்பதாக கூறினீர்கள் . இதுவரை ஏதும் நிகழவில்லை.உரித்து நிர்ணயம் செய்யப்பட்ட காணியை கூட பயன்படுத்த முடியாத துர்ப்பாக்கிய நிலை காணப்படுகிறது. ஏழைகள் வாழ்வாதாரத்திற்கு பாலைப் பழம் பிடுங்குவதற்கு கூட முடியாத மிக மோசமான அடக்குமுறையை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அடிப்படை உரிமையும் நசுக்கப்படுகிறது. புதிதாக குடியேறுவதற்கு ஒரு துண்டு நிலம் கூட இல்லை .முப்படைகளுக்கும் பௌத்த கோயில்கலையும் கட்டமைப்பதற்கு எந்தச் சட்டமும் கட்டுப்படுத்துவதில்லை. மன்னாரின் வளத்தையும் சுரண்டி வாழ்வியலையும் கெடுப்பது நியாயம் தானா? தற்போதைய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூட இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை. பாட்டாளி வர்க்கத்தின் கூட்டாளி எனக் கூறும் தாங்கள் எமது மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன் இந்த நிலங்களையாவது விடுவியுங்கள் எமது மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மன்னாரில் காற்றாலை திட்டத்தை திறக்க வரும் முன், கையகப் படுத்தப்பட்டுள்ள நிலங்களையாவது விடுவிக்க வேண்டும்! – Global Tamil News
4