கேகாலை மாவட்டம், தெரணியகல பகுதியில் உள்ள நூரி தோட்டத்தில் (Noori Estate) 14 வயது சிறுவன் ஒருவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கடந்த ஜனவரி 2ஆம் திகதி உயிரிழந்த சந்திர குமார் ரஞ்சித் குமார் என்ற சிறுவனின் சடலம், நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று திங்கட்கிழமை (12-01-2026) தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த ஜனவரி 2ஆம் திகதி சிறுவன் தனது பெற்றோருடன் வீட்டில் இருந்தபோதே உயிரிழந்துள்ளார். சிறுவன் தாக்கப்பட்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் அங்கு சென்றபோது, சிறுவன் வீட்டின் அருகே மயக்க நிலையில் கிடந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் சிறுவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதிய நூரி காவல்துறையினர், அவரது தாய் மற்றும் தந்தையை கைது செய்தனர். அவர்கள் தற்போது அவிசாவளை நீதவான் நீதிமன்ற உத்தரவுப்படி குருவிட்ட விளக்கமறியல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் சிறுவனின் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறியவும், அவர் உடல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டாரா என்பதை உறுதிப்படுத்தவும் விசேட பிரேதப் பரிசோதனை அவசியம் என நீதிமன்றம் கருதியது. இதன்படி, அவிசாவளை நீதவான் பிரமோத் ஜெயசேகர முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மேலதிக மருத்துவ ஆய்வுகளுக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்தச் சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரியும், உண்மையான காரணத்தை வெளிப்படுத்தக் கோரியும் நூரி தோட்ட மக்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது காலம் பதற்றம் நிலவியது. Tag Words: #NooriEstate #Deraniyagala #KegalleNews #JusticeForRanjith #ChildAbuseAwareness #PoliceInvestigation #SriLankaNews #AvissawellaCourt #HumanRights
🚨 நூரி தோட்ட சிறுவன் மரணம் – சடலம் தோண்டி எடுப்பு – Global Tamil News
3