மன்னாரில் இன்று செவ்வாய்க்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தமிழக அரசு மற்றும் இலங்கை பிரதிநிதிகள் மீது முன்வைத்துள்ள விமர்சனங்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. தமிழகத்தில் நடைபெற்ற ‘அயலகத் தமிழர் தினம்’ கொண்டாட்டங்களை வரவேற்கும் அதேவேளை, ஈழத்து மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அதில் புறக்கணிப்பது வேதனையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழக மீனவர்களின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தத் தவறியமைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே பொறுப்பு. அவரே இந்தச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துவதாக மீனவர்கள் கருதுகின்றனர் என அவா் தொிவித்துள்ளாா். மேலும் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட செந்தில் தொண்டமான் போன்ற பிரதிநிதிகள், வடபகுதி மீனவர்களின் இன்னல்கள் குறித்துப் பேசத் தயங்குகின்றனர் அல்லது தவிர்த்து வருகின்றனர் . இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட வடபகுதி மீனவர்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் வந்து வளங்களைச் சூறையாடுவது தொடர்கிறது. இரு நாட்டுத் தமிழர்களும் மொழியால் இணைந்திருந்தாலும், ஒரு தரப்பின் வாழ்வாதாரத்தை மறுதரப்பு அழிப்பது “உறவு” ஆகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும் “தமிழால் இணைவோம்” என்பது வெறும் அரசியல் அல்லது மொழி சார்ந்த உறவாக மட்டும் இருக்கக் கூடாது. அது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் செயலில் பிரதிபலிக்க வேண்டும் என என்.எம்.ஆலம் வலியுறுத்தியுள்ளார்.
“தமிழால் இணைவோம்” என்பது வெறும் வார்த்தையல்ல – Global Tamil News
4