வேலணையில் அனுர! : எழுவைதீவில் காணி பிடிப்பு!

by ilankai

இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினமன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள நிலையில் மறுபுறத்தே முப்படைகளிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.அனுர பயணிக்கவுள்ள தீவகத்தின் வேலணைக்கு அருகாக எழுவைதீவில் கடற்படையின் தேவைக்காக பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் அறிவித்தலை நில அளவைத் திணைக்களம் விடுத்துள்ளது.யாழ்ப்பாணம் ஊர்காவல்துறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட எழுவைதீவு இறங்குறைக்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாம் அமைந்துள்ள தனியார் காணியையே சுவீகரிப்பதற்காக நில அளவைத் திணைக்களம் காணி உரிமையாளர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.தீவகம் இலங்கை கடற்படையினர் வசம் வீழ்ந்த 1990 ஆம் ஆண்டின்; பின்னர் கடற்படையினர் முகாம் அமைத்து தமது தேவைகளுக்காக பயன்படுத்தி வரும் நிலையில் தமிழ் மக்களின் பூர்வீக காணியை இழந்துள்ளனர்.தற்போது கடற்படையினர் பயன்படுத்தி வரும் காணியில் சிறிய வீடு ஒன்றை காணி உரிமையாளர் ஒருபுறமாக அமைத்து வாழ்ந்து வந்த நிலையில் சுமார் 30 வருடங்களின் பின்னராக காணிகளை பறித்துவிட அனுர அரசு முனைப்பு காண்பித்துள்ளது.இதனிடையே ஆக்கிரமிக்கப்பட்ட காணியின் உரிமையாளர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மகன் மனநலம் பாதிக்கப்பட்டவராக காணப்படுகிறார். தமது பூர்வீக நிலத்தை கடற்படையினருக்கு கொடுப்பதற்கு தயார் இல்லை தமது குடும்ப நிலையை கருத்தில் கொண்டு யாழ் வரும் ஜனாதிபதி காணியை மீளளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடும்பம் கோரிக்கை விடுத்துள்ளது.

Related Posts