ஈரான் நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் விரக்தி அடைந்துள்ள மக்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரானின் 31 மாகாணங்களில் 100 நகரங்களில் 16-வது நாளாக இன்றும் போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.வன்முறையை தடுக்கும் நோக்கில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இணையதள சேவையை அரசு முடக்கி வைத்து உள்ளது. சில அரசு ஊடகங்கள் மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் 544 பேர் பலியாகி இருக்க கூடும் என அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட மனித உரிமைகள் அமைப்பு ஒன்று அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10,681 பேர் அரசால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இந்த சூழலில், ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார். போராடும் மக்கள் பாதிக்கப்பட்டால், ஈரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். எனினும், உங்களுடைய சொந்த விவகாரங்களில் கவனம் செலுத்துங்கள் என ஈரான் தலைவர் காமேனி கூறினார்.இந்நிலையில், ஈரான் பற்றிய கேள்விக்கு பதிலளித்த வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ஈரான் விவகாரத்தில் அனைத்து விசயங்களும் டிரம்பின் மேசை மீது ஆவணங்களாக வைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் ஈரான் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துவதும் ஒன்று என்று கூறி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.இந்த சூழலில், ஈரானை நேரடியாக தாக்குவதற்கு பதிலாக மறைமுக தாக்குதல் நடத்தும் வகையிலான முடிவை டிரம்ப் எடுத்துள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரான் இஸ்லாமிய குடியரசு நாடுடன் வர்த்தகம் செய்து, அமெரிக்காவுடனும் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுகிறது.இது உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த உத்தரவு இறுதியானது மற்றும் முடிவானது. இந்த விவகாரத்தில் கவனம் செலுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்து உள்ளார். இதனால், ஈரானுடன் ஏற்றுமதி, இறக்குமதி செய்யும் நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்படும். அவை பின்வாங்கும்போது, அது ஈரானுக்கு வர்த்தக ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். ஏற்கனவே பணவீக்கம் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஈரானில் நிலைமையை மோசமடைய செய்யும்.
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பு
6