பிரதமர் ஹரினி அமரசூரிய மீதான எதிரணியினரின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஓரந்தள்ள, முன்னைய ஆட்சிக்காலங்களில் மீளப்பெறப்பட்ட 65 வழக்குகளை தூசு தட்டி எடுத்துள்ளது அநுர அரசு. சிறீதரன் எம்.பியை கட்சியிலிருந்து ஒதுக்குவதற்கு கடிதம் எழுதியுள்ள தமிழரசுக் கட்சி ஆப்பிழுத்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்கின்றனர் கட்சியின் உள்வீட்டுக்காரர்கள். இலங்கை அரசியலில், இரு தரப்பிலும் வித்தியாசமான ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. இரு தரப்பிலும் என்று குறிப்பிடுவது தெற்கிலும் தமிழர் தாயகத்திலும் என்பதாகும். ஆட்சித்தரப்பு ஆட்டம் பிரதமர் ஹரினி அமரசூரியவை மையப்படுத்தியது. இவரே கல்வி அமைச்சராகவும் இருப்பதால் புதிய கல்வித்திட்டம் ஒன்றை இவ்வருடம் அறிமுகம் செய்தார். இதில் என்ன மாற்றம் வந்துள்ளது என்று புரியாமலே, எதிர்க்கட்சிகள் என்றால் எதனையும் எதிர்க்க வேண்டுமென்ற பாணியில் எதிர்ப்புக் கிளம்பியது. ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் விசமிகள் சிலர் புகுத்திய வேண்டப்படாத இடைச்செருகல் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. ஹரினிக்கும் ஜே.வி.பி. தலைமைக்கும் இடையில் ஏற்கனவே பிச்சல் பிடுங்கல் என்றும் அவரை பதவி நீக்க ஜே.வி.பி. செயலர் ரில்வின் சில்வா முயற்சிப்பதாகவும் ஊடகங்கள் தெரிவித்து வந்தன. இதனை சஜித், நாமல் தலைமையிலான கட்சிகள் நாடாளுமன்றத்திலும் சொல்லி வந்தன. ஹரினியைப் பதம் பார்த்தால் அநுர அரசுக்குள் வெடிப்பை ஏற்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அநுர அரசின் அமைச்சரவையில் ஹரினி மட்டும் ஜே.வி.பி. உறுப்பினர் அல்லாதவர். இவரது பிரதமர் பதவியில் அமைச்சர் பிமல் ரத்னநாயக்க கண் வைத்திருப்பதாகவும் பரபரப்பான செய்திகள் வந்தன. இந்தச் சூழ்நிலையில் பாடப்புத்தக விவகாரத்தை பெரிதாக்கி, அரசை ஆட்டிப் பார்க்கலாம் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் இணைந்து அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்வைத்துள்ளன. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் ஒப்பமிட்டது பரபரப்பான செய்தியானது. அநுர அரசின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை நம்பிக்கையில்லாப் பிரேரணையை நிறைவேற்ற போதுமானதல்ல. இது எதிர்க்கட்சிகளுக்கு தெரியாததுமல்ல. எனினும் அரசுக்கெதிராக சுமத்த வேண்டிய அனைத்து குற்றங்களையும் ஓரேயடியாக நாடாளுமன்றில் கூறி அதனை அதிகார ஏட்டிலும், பொது ஊடகங்களிலும் பிரசித்தப்படுத்தினால் போதுமென்ற கோதாவிலேயே பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்த முன்னெடுப்புக்கு இவ்விடயத்தில் துள்ளிக் கொண்டிருக்கும் நாமலின் தந்தையான மகிந்த ராஜபக்ச ஆதரவில்லை. இதனை அவரே வெளிப்படுத்தியுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதமர் ஹரினி மீதான அநாவசியத் தாக்குதல்களை கண்டிதுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியுற்றாலும் ஜே.வி.பி.யினரின் நிலைப்பாட்டை அறியவாவது இது உதவுமென சஜித் தரப்பு நம்புகிறது. ஹரினி ஒரு பெண் என்பதால்தான் தாக்கப்படுகிறார் என சில குரல்கள் எழும்புகின்றன. சிறிமாவோ பண்டாரநாயக்க பிரதமரானபோதும், அவரது சிவில் உரிமைகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசு ரத்துச் செய்த போதும் இதே கோசங்கள் எழும்பியதுண்டு. ஆனால், ஹரினி இவற்றை எதிர்கொண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்த ஒரு விடயம் அவரை சிங்கப் பெண்ணாக காட்டியுள்ளது. 2019 – 2024 ஆட்சிக் காலங்களில் நீதிமன்றங்களில் வாபஸ் பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 மீள எடுக்கப்பட்டு மீண்டும் நீதிமன்றங்களுக்கு செல்கின்றன என அறிவித்து, எதிரணியினருக்கு வயிற்றோட்ட மாத்திரை கொடுத்துள்ளார் ஹரினி. அந்த 65 வழக்குகளில் தாங்களும் இருப்போமோ என்ற அச்சம் எதிரணியில் உள்ள சில எம்.பிக்களுக்கும் முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது ஆட்சித் தரப்பின் இலக்கு. ராஜபக்சக்கள், மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கால பிரமுகர்கள் பலர் ஏற்கனவே ஊழல் வழக்குகளில் கைதாகி பிணையில் உள்ளனர். பொதுஜன பெரமுனவின் முக்கிய புள்ளியான ஜோன்சன் பெர்ணான்டோவும் அவரது மகனும் அண்மையில் கைதாகினர். போகிற போக்கைப் பார்க்கின் ராஜபக்சக்களோடு நெருக்கமாக இருந்தவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த நிலை தொடருமானால் அநுர அரசுக்கு எதிரான முன்னெடுப்புகள் குழிகளுக்குள் விழும். மாகாண சபைத் தேர்தல் காணாமல் போகும். புதிய அரசியலமைப்பு தயாரிப்பை காட்டி அரசின் ஆட்சிக் காலம் நீடிப்புக்கு உள்ளாகலாம். 1972ல் சிறிமாவோவும், 1978ல் ஜே.ஆரும் புதிய அரசியலமைப்பைக் காட்டித்தான் நாடாளுமன்ற ஆயுளை அவ்வப்போது நீடித்தார்கள் என்பது ரில்வினுக்கும் அநுரவுக்கும் தெரியாததா?தெற்குக்குச் சமாந்தரமாக தமிழர் தரப்பு அரசியல் வேறு வகை ஓட்டம் நடத்துகிறது. எடுத்ததற்கெல்லாம் கட்சி உறுப்பினர்களிடம் விளக்கம் கேட்பதும் அவர்களை இடைநீக்கம் செய்வதும் தமிழரசு கட்சியின் பதில் செயலாளரது தினசரி வேலையாகி விட்டது. எப்படியாவது தமது பெயர் ஊடகங்களில் வந்தால் போதுமென இவர் நினைக்கிறார் போலும். வன்னிப் பிராந்திய முன்னாள் எம்.பி. சிவமோகன் சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் முன்னணி பிரமுகர்களை பெயர் கூறி விளாசித் தள்ளிய கண்டனங்களை எல்லாரும் படிக்க நேர்ந்தது. எனது அறிவுக்கு எட்டிய வகையில் கட்சித் தலைமையை இவ்வாறு கிழித்துத் தொங்கப்போட்ட ஓர் அறிக்கையை முன்னர் எப்போதும் படித்ததாக ஞாபகம் இல்லை. சில நாட்களுக்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழரசு கட்சிக்கு எதிராக சில கருத்துகளை தெரிவித்திருந்தார். தொடர்ந்து எங்களை அடித்தால் நாங்களும் திருப்பி அடிப்போம் என்று ஊடகங்கள் ஊடாக தமிழரசுக் கட்சி கஜேந்திரகுமாரை எச்சரித்திருந்தது. இவர் ஒரு பனங்காட்டு நரி. சலசலப்புக்கு அஞ்ச மாட்டார். இப்போது சிவமோகனுக்கும் இவ்வாறான ஓர் எச்சரிக்கையை தமிழரசுத் தலைமை விடுமா? நிச்சயமாக மௌனம்தான் சாதிப்பார்கள். .தமிழரசின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த முக்கியமான பலருடன் கடந்த சில நாட்களாக உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது, கட்சியின் பதில் தலைமை கண்களை மூடிக்கொண்டிருப்பதாக சிலர் சொல்கிறார்கள். இல்லையில்லை – அவர் பதில் செயலாளரை கண்காணித்துக் கொண்டிருப்பதாக வேறு சிலரது கருத்து. அரசமைப்புச் சபையில் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதியாகவுள்ள கிளிநொச்சி எம்.பி. சிறீதரன் மீது இப்போது கட்சியின் பார்வை திரும்பியுள்ளது. இவர் மீதான குற்றச்சாட்டுக்கு கட்சி விளக்கம் கேட்கவில்லை. ஆனால், அந்தப் பதவியிலிருந்து விலகுமாறு கடிதம் அனுப்பியுள்ளது. இதனை விளக்கமாகச் சொல்வதானால் சிறீதரன் மீது நடவடிக்கை எடுக்க முடியாதென உள்வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படியென்றால் ஏன் இந்தக் கடிதம் என்ற கேள்வி எழுகிறது. எதிர்காலத்தில் இவர் மீது ஏதாவது நடவடிக்கை எடுக்க நேர்ந்தால் அதற்கு பலம் கூட்ட இக்கடிதம் உதவலாம் என்று நம்புகிறார்களாம். அதுமட்டுமன்றி சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற எவராவது முயற்சித்தால் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அதற்கு உடன்பட மாட்டாரென்றும் அவரது பதவிக்கான அதிகாரத்தை பயன்படுத்துவாரென்றும் மார்ட்டின் வீதியிலுள்ள மூத்தோர் கிளப்பில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கம் செய்தால் அதன் பாதிப்பு கட்சிக்கே என்றும் தலைமை மேசையில் உள்ளவர்களுக்கு தெரியுமாம். சேலை முள்ளில் பட்டாலென்ன, முள் சேலையில் பட்டாலென்ன சேலைக்குத்தான் சேதம் என்ற நிலையில் கட்சி இருக்கிறது. அதாவது, சிறீதரனை கட்சியிலிருந்து நீக்கினால் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் இப்போது தக்க வைத்துள்ள ஓர் ஆசனம்கூட இல்லாமல் போகும். சிறீதரன் சுயேட்சையாகக் கேட்டாலும் வெற்றி பெறுவார் என்பது கட்சிக்காரர்கள் அனைவருக்குமே தெரிந்த விடயம். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மைய இந்திய மற்றும் நோர்வே பயணங்களை தமிழரசுச் கட்சியினர் அங்கலாய்ப்புடன் உன்னிப்பாகக் கவனிக்கின்றனர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தை பூரணமாக நடைமுறைப்படுத்த இந்தியா முன்வராது அசட்டையாக இருப்பதை தங்களுக்கான பின்னடைவாகக் கருதும் தமிழரசுக் கட்சி, மாகாண சபையை ஒதுக்கிவிட்டு புதிய அரசியலமைப்பில் சமஷ்டி ஆட்சியைக் கோரும் கஜேந்திரகுமாரின் சர்வதேச பயணத்தையிட்டு பலவாறாக சிந்திக்கிறது. ஏதோ ஒரு ஐரோப்பிய நாடு இதன் பின்னணியில் இருக்கலாம் என மூக்கில் விரலை வைத்து ஆட்டும் தமிழரசுக் கட்சியினர், ஒரு குறிப்பிட்ட நாட்டில் சந்தேகம் கொண்டுள்ளனர். எதுவானாலும் மலிவாகும்போது சந்திக்கோ சந்தைக்கோ வரும்தானே.
ஹரினி மீதான நம்பிக்கையீன பிரேரணையும் சிறீதரன் மீதான நடவடிக்கைக் கடிதமும்! பனங்காட்டான்
7