விசாரணைகள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், யாழ்ப்பாணம் தையிட்டி திஸ்ஸ விகாரை காணி விவகாரம் மீண்டும் ஒரு சிக்கலான கட்டத்தை எட்டியுள்ளது. பொதுமக்கள் மற்றும் காணி உரிமையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக வெளியாகியுள்ள இந்தத் தகவல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாகக் கையகப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகக் கொழும்பில் நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்தில் எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை எனத் தெரியவருகிறது. விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளில் ஒரு சிறு பகுதியைக்கூட மீள ஒப்படைக்க முடியாது என விகாராதிபதியும், பௌத்த சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் நேற்றைய (சனிக்கிழமை) கூட்டத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, விகாரை தவிர்ந்த ஏனைய காணிகளை விடுவிக்க வேலிகளைப் பின் நகர்த்த நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்தச் செய்தி காணி உரிமையாளர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது. எதிர்வரும் ஜனவரி 15 (தைப்பொங்கல்) அன்று யாழ்ப்பாணம் வருகை தரும் ஜனாதிபதி, இதற்கான தீர்வை அறிவிப்பார் என மக்கள் ஆவலுடன் காத்திருந்த வேளையில் இந்த முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர், அரசாங்கம் தொடர்ந்து காணிகளை விடுவிக்கவே முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்: “காணிகளை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்போம். அடுத்தகட்டக் கலந்துரையாடலில் சாதகமான முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” எனத் தொிவித்துள்ளாா். தையிட்டி விகாரை சட்டவிரோதமாகக் கட்டப்பட்டதாகக் கூறி ஏற்கனவே பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தற்போது அரசாங்கத் தரப்பு இணக்கம் தெரிவித்தாலும், மதத் தலைவர்கள் மற்றும் அமைச்சுப் பிரதிநிதிகளின் பிடிவாதமான போக்கு இந்த விவகாரத்தை மீண்டும் நீதிமன்றம் அல்லது பாரிய மக்கள் போராட்டத்தை நோக்கி நகர்த்தக்கூடும் என அஞ்சப்படுகிறது. Tag Words: #JaffnaNews #Thaiyiddy #TissaVihara #LandDispute #SriLankaPolitics #ThaiPongal2026 #TamilLandRights #Tellippalai #BreakingNewsSL
🏛️ தையிட்டி காணி விவகாரம்: விகாராதிபதியின் மறுப்பும் தொடரும் இழுபறியும் – Global Tamil News
2