யாழ்ப்பாணம், பருத்தித்துறை தும்பளை கிழக்கு பகுதியில் உள்ள மூர்க்கம் (Moorrkham) கடற்கரை, நேற்றைய தினம் (சனிக்கிழமை) ஏற்பட்ட கடும் கடற்கொந்தளிப்பு காரணமாகப் பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளது. கடல் அலைகளின் சீற்றம் காரணமாகக் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த பல நிரந்தர கட்டுமானங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. அத்துடன் சிறுவர்கள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த பூங்கா உபகரணங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் அள்ளுண்டு போயுள்ளன. மேலும் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டிருந்த கொங்றீட் வீதி மற்றும் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் நடைபாதைகள் அலைகளால் உடைந்து சிதைந்துள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சீமெந்து இருக்கைகளும் அழிவடைந்துள்ளன. விபரம் அறிந்ததும், பருத்தித்துறை நகர சபை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் அவர்கள் நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளாா். சேத விபரங்களை மதிப்பீடு செய்த அவர், இது தொடர்பாக உரிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் திணைக்களப் பணிப்பாளர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்தியுள்ளார். கடற்கரையோரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், சேதமடைந்த உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். Tag Words: #JaffnaNews #PointPedro #MoorrkhamBeach #CoastalErosion #NaturalDisasterSL #TamilNews #UrbanCouncil #PointPedroDamage
🌊சீரற்ற கால நிலை – கடல் கொந்தளிப்பால் மூர்க்கம் கடற்கரை பாதிப்பு – Global Tamil News
0