யாழ்ப்பாணம் ,பாதுகாப்பற்ற புகையிரத கடவை, கோர விபத்து – இளைஞன் படுகாயம் யாழ்ப்பாணம், அரியாலைப் பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த சொகுசு புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இளைஞர் ஒருவர் மிக மோசமான நிலையில் காயமடைந்துள்ளார். இன்று சனிக்கிழமை அரியாலை 13 ஆம் கட்டைப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு புகையிரதம் (Luxury Train), கடவையை கடக்க முயன்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உடனடியாக அங்கிருந்த மக்களால் மீட்கப்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தற்செயலானது அல்ல, அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்தது என அரியாலை பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறித்த பகுதியில் புகையிரத சமிக்ஞை விளக்குகளோ அல்லது பாதுகாப்புக் கடவைகளோ (Gates) இல்லை. ஏற்கனவே பல விபத்துக்கள் இங்கு நிகழ்ந்துள்ள போதிலும், கடவையை சீரமைக்கக் கோரி மக்கள் விடுத்த கோரிக்கைகள் அதிகாரிகளால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.உடனடியாக இந்த இடத்தைப் பாதுகாப்பான கடவையாக மாற்ற வேண்டும் எனப் பிரதேச வாசிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்பற்ற புகையிரதக்கடவையில் விபத்து – இளைஞன் படுகாயம் – Global Tamil News
7