அட்லாண்டிக் பெருங்கடலில் ரஷ்யக் கொடியுடன் பயணித்த எண்ணெய் கப்பல் ஒன்றை அமெரிக்கப் படைகள் இரண்டு வாரங்களாகப் பின்தொடர்ந்து, தற்போது அதைக் கைப்பற்றியுள்ள செய்தி உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கப் படைகள் மற்றும் கடலோர காவல்படை இணைந்து நடத்திய இந்த நடவடிக்கையில், “மறினேரா” (Marinera) என்ற ரஷ்ய எண்ணெய் கப்பல் நேற்று (ஜனவரி 7, 2026) கைப்பற்றப்பட்டது. முதலில் “பெல்லா-1” (Bella-1) என்ற பெயரில் கயானா நாட்டுக் கொடியுடன் பயணித்த இந்தக் கப்பல், வெனிசுலாவிற்கு எண்ணெய் ஏற்றச் சென்றது. அமெரிக்கத் தடைகளை மீறியதாகக் கூறி இக்கப்பலைப் பிடிக்க அமெரிக்கா முயன்றபோது, கப்பல் பணியாளர்கள் அதன் மீது ரஷ்யக் கொடியை வரைந்து, பெயரையும் மாற்றி ரஷ்யாவிடம் பாதுகாப்பு கோரினர். கரீபியன் கடலில் இருந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் இரண்டு வாரங்களாக அமெரிக்கக் கடலோர காவல்படை இந்தக் கப்பலைப் பின்தொடர்ந்த நிலையில் ஐஸ்லாந்து நாட்டிற்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் வைத்து, அமெரிக்காவின் Navy SEALs வீரர்கள் ஹெலிகொப்டர் மூலம் கப்பலில் இறங்கி அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்த நடவடிக்கையை “21 ஆம் நூற்றாண்டின் கடற் கொள்ளை” என ரஷ்யா விமர்சித்துள்ளது. மேலும், தனது கப்பலைப் பாதுகாக்க ஒரு நீர்மூழ்கிக் கப்பலையும் (Submarine) ரஷ்யா அனுப்பியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கப்பல் தற்போது காலியாகவே (எண்ணெய் இன்றி) இருப்பதாகக் கூறப்பட்டாலும், இதில் ரஷ்யாவின் இரகசிய ஆயுதங்கள் இருக்கலாம் அல்லது தடைகளை மீறி ஈரானிய எண்ணெய் கடத்தலுக்கு இது பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகிக்கிறது. Tag Words: #RussianOilTanker #USNavy #Marinera #AtlanticOcean #Sanctions #BreakingNewsTamil #USRussiaTension #InternationalMaritimeLaw
ரஷ்ய எண்ணெய் கப்பலைக் கைப்பற்றிய அமெரிக்கா – Global Tamil News
7