பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் , பேருந்தை வீதியில் வழிமறித்து சாரதி மீது சரமாரியாக தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி ஊர்காவற்துறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை மாலை ஊர்காவற்துறை நோக்கி பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்தினை மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த நபர் ஒருவர் அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் பேருந்தை மறித்து , பேருந்தில் ஏறி சாரதி மீது சரமாரியாக தாக்குதலை நடாத்தி விட்டு , இறங்கி மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான சாரதி பயணிகளுடன் பேருந்தை ஊர்காவற்துறை பொலிஸ் நிலையம் வரையில் அழைத்து சென்று , பொலிஸ் நிலையத்தில் தன் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் பயணிகளின் சாட்சியங்களுடன் முறைப்பாடு அளித்த பின்னர் , சிகிச்சைக்காக ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அதேவேளை , தாக்குதலாளி செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் இலக்கம், தாக்குதலாளியின் அடையாளங்கள் என்பவை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் அடிப்படையில் தாக்குதலாளியை நாளைய தினம் வியாழக்கிழமை இரவிற்குள் கைது செய்யப்பட வேண்டும். இல்லை எனில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீவகத்திற்கான தனியார் போக்குவரத்து சேவைகளை முடக்கி போராட்டத்தில் ஈடுபடுவோம் என தீவக தனியார் பேருந்து சேவை உரிமையாளர்கள் சங்கம் பொலிஸாருக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது.
யாழில். பயணிகளுடன் பயணித்த பேருந்தை மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று மறித்து சாரதி மீது தாக்குதல்
6