திருட்டுத்தனமாக, அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள் கட்சிக்கு சேறு பூசும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக சிறிதரன் மீதான நடவடிக்கை குறித்து முன்னாள் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.வவுனியாவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரனுக்கும், சிறிநேசனுக்கு எதிராக தமிழரசுகட்சி என்ற போர்வையில் அவிழ்த்துவிடப்படும் சேறு பூசல்கள் தொடர்பாக நாம் கவனம் எடுத்துள்ளோம். குறித்த இருவரும் அவர்களது மாவட்டங்களில் அதிகூடிய வாக்குகளை பெற்று நேரடியாக பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டவர்கள்.அவர்களுக்கு எதிராக தமிழரசுக் கட்சி என்ற போர்வையில் ஊடக சேறு பூசல்கள் செய்கிறார்கள் என்றால் இவர்களா கட்சியில் விசுவாசம் உள்ளவர்கள். திருட்டுத்தனமாக அரசியல் அலங்கோலத்தனமாக, துரோகத்தனங்களால் தமிழரசுக் கட்சியின் தற்காலிக பதவிகளை வைத்துக் கொண்டிருப்பவர்கள். முன்னெடுக்கும் நடவடிக்கைகளே இவை.தமிழ்த் தேசியத்துடன் நிற்ப்பவர்கள். யார் கட்சியை சேற்றுக்குள் புதைக்க நினைப்பவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும். 2008 மாவீரர் உரையில் தேசிய தலைவர் தெளிவாக சொன்னது போல ஈழ விடுதலை போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த பொறுப்பினை எடுக்க வேண்டிய தமிழரசுகட்சி திருட்டுத்தனமாக சூழ்ச்சிகள் மூலம் அரசியல் சகதிக்குள் தள்ளிவிடப்பட்டுள்ளது. இது ஒரு கவலைக்குரிய விடயம்.இவர்கள் எடுக்கும் உறுப்பினர் நீக்க அரசியல் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும். இதுவே எனது கோரிக்கை. இவர்கள் தமிழரசுக் கட்சியில் நேர்மையான முறையில் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. மத்தியகுழு என்ற போர்வையில் கட்சியை தவறாக வழிநடத்தி அழித்தொழிக்கும் செயற்பாட்டையே செய்கின்றனர்.தமிழர் இருப்பிற்கு எதிராக செயற்படும் சிங்கள அரசுகளே எங்களது பொது எதிரி. தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருக்கிறது என்றால் அதற்கு காரணம் இவர்களை போன்றவர்களே. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர், பதில் செயலாளர் ஆகிய அனைவரும் மக்களாலும் கட்சியாலும் நிராகரிக்கப்பட்டவர்கள்.இன்று திருட்டுத்தனமாக பதவிகளை வைத்துக் கொண்டு விசாரணைகள் என்ற போர்வையில் இவற்றை செய்யக்கூடாது. சிங்களதேசத்தின் ரகசிய நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தும் ஒரு கூட்டமாகவே இதனை நான் பார்க்கிறேன்.எமது கண் முன்னால் பொது எதிரியும் துரோகியும் இருந்தால் நாங்கள் முதலில் அழிக்க வேண்டியது துரோகியையே. எதிரியை அல்ல. இல்லாவிடில் ஈழ அரசியல் போராட்டம் ஒட்டுமொத்தமாக முறியடிக்கப்படும். எனவே கட்சியில் ஒரு நியாயமான பக்கச்சார்பற்ற விசாரணை குழு ஒன்றை நியமித்து இவர்களது செயற்பாடுகள் அனைத்தும் விசாரிக்கப்பட வேண்டும்.சிறிநேசன் எம்.பி அரியநேத்திரனுடன் மேடையில் இருந்து விட்டாராம். இதனால் அவரிடம் விளக்கம் கேட்கிறார்களாம். ஏன் நீங்கள் இருக்கவில்லையா. மகிந்தவுடன் மேடையில் இருக்காதவர்களா மட்டக்களப்பில் உள்ள அரசியல் தலைவர்கள். அவருக்கு நீங்கள் சாமரம் வீசவில்லையா. வன்னியில் மக்கள் அழிக்கப்படும் போது பாற்ச்சோறு உண்டு கண்டு கழித்தவர்களே நீங்கள் என்று மக்களுக்கு தெரியும்.ஆனால் கட்சி விட்ட தவறால் நீங்கள் முன்னே வந்து எந்த தலைவர் உங்களை கட்சிக்குள் கொண்டு வந்தாரோ அந்த தலைவரை பார்த்து நீர் எப்படி கட்சியின் தலைவராக இருப்பீர்கள் என கேட்டவர்கள் தான் தற்போது மட்டக்களப்பில் உள்ளவர்கள். இதுவே உண்மை.விசாரணைகளை செய்வதென்றால் எவரை தேசிய பட்டியல் மூலம் கொண்டு வந்து தமிழ்த் தேசிய அரசியலில் அலங்கோலம் செய்ய வழிவிட்டார்களோ அந்த இடத்தில் இருந்து விசாரணைகளை செய்ய வேண்டும். சம்பந்தன் ஐயா சுமந்திரனை கொண்டு வந்த நேரத்தில் இருந்து விசாரணைகள் தொடங்கப்படவேண்டும். எந்த நேரத்தில் மாவை ஐயா மட்டக்களப்பில் ஒருவரை கொண்டு வந்தாரோ அந்த இடத்தில் இருந்து விசாரிக்கப்பட வேண்டும்.எமது தமிழரசுக் கட்சியை அழிக்கும் நோக்குடன் வழக்குப் போட்டு பொதுக் குழுவை நிர்மூலமாக்கி கட்சியையும் நிர்மூலமாக்கிய ஒருவரை இந்த தலைமைகள் தமது வீட்டில் கூட்டி வைத்து விருத்துண்டு மகிழ்ந்தார்கள். சிறிநேசன் அரியநேத்திரனுக்கு செய்தது தவறாக இருந்தால் எமது கட்சியை வழக்கு போட்டு நிர்மூலமாக்கியவனை கூப்பிட்டு வைத்து விருந்துண்ட நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நீங்களே யோசிக்க வேண்டும்.இல்லை நாங்கள் அப்படி செய்ய வில்லை என்றால் இந்த பதில் தலைவர், செயலாளர் ஆகியோர் விருந்துண்ணவில்லை என்றால் அதனை பகிரங்கமாக சொல்லட்டும் பார்ப்போம். சிறிதரனை உருக்குலைத்து விட்டால் யாழில் ஒரு ஆசனம் கிடைக்கும் அதனை நான் கைப்பற்றிக் கொள்ளலாம் என்றும் மட்டக்களப்பில் சிறிநேசனை உருக்குலைத்தாலே எனக்கு வெற்றி என்றும் நினைப்பவர்களின் பின்னால் தமிழரசுக் கட்சி செல்லக்கூடாது. செல்லவும் விடமாட்டோம்.முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப் பற்று பிரதேசசபை விடயத்தில் உண்மையான தலைவர்களாக இருந்திருந்தால் அன்று அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து கட்சி எடுத்த தீர்மானம் தொடர்பாக தெளிவாக சொல்லியிருக்க வேண்டும். உறுப்பினர்கள் அனைவரதும் கருத்துக்கள் அறியப்பட்டிருக்க வேண்டும். அதனடிப்படையில் ஒரு பொது முடிவு எட்டப்பட்டிருக்க வேண்டும்.அதை விடுத்து தமிழரசுக் கட்சியால் தயார் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்டத்தை அந்த கட்சியை சேர்ந்தவனே தோற்க்கடிப்பானா. அப்படி தோற்கடிக்க சொல்வது நியாயமா. அதுகும் அந்த தகவல் வட்சப் ஊடாகவே வழங்கப்பட்டதாம். யார் அதனை நடாத்துபவர் என்றால் பின்னேரம் ஆனால் கஞ்சாவிற்கு கீழ் படுத்துக்கிடப்பவர். இது என்ன அமைப்பு. ஒரு பிரதேச சபையை கைக்குள் வைத்திருக்க முடியாத நீங்கள் விடுதலையை விரும்பி நிற்கும் தமிழ் மக்களை எப்படி வழிநடத்த முடியும்.முல்லைத்தீவில் ஒரு முட்டாள் அரசியலில் இருக்க வேண்டும். அவனை வைத்து முல்லைத்தீவில் இருப்பவர்களை நீங்கள் மாடு மேய்க்க வேண்டும் இதுவா உங்கள் அரசியல். நிச்சயமாக இதற்கு விட்டுக் கொடுக்கப் போவதில்லை.நீங்கள் விடுகின்ற ஒவ்வொரு தவறுகளும் மக்களுக்கு சுட்டிக்காட்டப்படும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறுகளு் தேசிய மக்கள் சக்தியை வெல்லவைக்கும். எனவே ஜனநாயக ரீதியாக தமிழரசுக் கட்சியை மறுசீரமைப்பதற்கு மத்திய குழுவில் இருக்கும் அனைவரும் முன்வரவேண்டும். கட்சியை மக்கள் விரும்பும் அமைப்பாக கொண்டு நடாத்த வேண்டும் என்றார்.
திருட்டுத்தனமாக, அரசியல்?
6